Published : 28 Oct 2017 11:56 am

Updated : 28 Oct 2017 11:56 am

 

Published : 28 Oct 2017 11:56 AM
Last Updated : 28 Oct 2017 11:56 AM

பறவைகள் குறித்தும் போதிப்போம்!

‘டேய் அங்க பாருடா… சீகாரப் பூங்குருவி’, ‘அந்த மரத்துல பாரு… மலை மைனா’ என்று விதவிதமான பறவைகளின் பெயரைச் சொல்லி, சக நண்பர்களுக்குக் காட்டி மகிழ்ந்து கொண்டிருந்தனர் அந்த மாணவர்கள். கடந்த 21, 22-ம் தேதிகளில் ஏலகிரியில் நடைபெற்ற ‘தமிழ்ப் பறவையியலாளர்கள் சந்திப்பில்’தான் இந்தக் காட்சி. பாடப் புத்தகங்களைத் தாண்டி பறவைகள் குறித்து இவ்வளவு அறிவா என்று வியந்து அவர்களிடம் பேசினோம்.

வால்பாறையில் உள்ள சின்கோனா அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள், அந்த மாணவர்கள். 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை படிக்கிறார்கள். கிரிக்கெட் மட்டையும் செல்போனுமாகச் சுற்றித் திரியும் மாணவர்களுக்கிடையில், கைகளில் க்ரிம்மெட் பறவைக் கையேடு, கழுத்தில் இருநோக்கியுடன் பறவைகளைத் தேடித் தேடிக் களிக்கும் ஆர்வம் இவர்களுக்கு எப்படி வந்தது?


Bird -2right

“பெரியவர்களைப் பார்த்துத்தான், குழந்தைகள் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள். இவர்களும் அப்படித்தான்” என்கிறார் செல்வ கணேஷ். இவர், மேற்சொன்ன பள்ளியில் ஆங்கில ஆசிரியர். அந்த மாணவர்களுக்குப் பறவை நோக்குதலில் ஆர்வம் ஏற்பட இவரே காரணம்!

சுயமான தேடல்

“பறவைகளைப் பற்றி சில வருடங்களுக்கு முன்புவரை எனக்குமே எதுவும் தெரியாது. ஒரு முறை ‘ஓசை’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த, பறவை நோக்குதல் நிகழ்வில் கலந்துகொண்டேன். அப்போதிலிருந்துதான் எனக்கும் பறவைகள் மீது ஈடுபாடுவந்தது.

சில மாதங்கள் கழித்து, சொந்தமாக இருநோக்கியும் பறவைக் கையேடும் வாங்கினேன். அந்தக் கையேட்டைத் துணைக்கு வைத்துக்கொண்டு, எனது சுய முயற்சியில் பறவைகளை அடையாளம் காணத் தொடங்கினேன்.

அப்படிச் செய்துகொண்டிருக்கும்போது, என்னைக் கவனித்த சில மாணவர்கள், இது குறித்து ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார்கள். அவர்களுக்குப் பறவை நோக்குதல் குறித்து விளக்கினேன். அவர்களுக்கும் அதில் ஆர்வம் ஏற்பட, இதோ இப்போது அவர்களின் முதன்மையான பொழுதுபோக்கே இதுதான்!” என்று சொல்லிப் புன்னகைக்கிறார் செல்வ கணேஷ்.

28CHVAN_Birds01.jpgபறவைகளைப் படிப்போம்

செல்வ கணேஷ் போன்றவர்களை ‘பேர்ட் எஜுக்கேட்டர்ஸ்’ (பறவைகள் குறித்து போதிப்பவர்கள்) என்று பறவையியலாளர்கள் அழைக்கின்றனர். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலமாகப் பறவைகள் குறித்துச் சொல்லித் தர, தமிழகத்தில் சிலர் முன்வந்திருக்கிறார்கள்.

“செல்வ கணேஷைப் போன்று சுமார் 14 ‘பேர்ட் எஜுக்கேட்டர்ஸ்’ இன்று உருவாகியுள்ளனர். அவர்கள் ‘சர்வ சிக்‌ஷா அபியான்’ திட்டத்தின் கீழ், பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களைச் சந்தித்து, பறவைகள், பறவை நோக்குதல் ஆகியவை குறித்து விளக்குகின்றனர். அவற்றில் ஆர்வமுடைய மாணவர்கள், பறவைகளைப் பின்தொடரவும் செய்கிறார்கள்” என்கிறார் கணேஷ்வர். கல்லூரி மாணவரான இவரும் ஒரு ‘பேர்ட் எஜுக்கேட்டர்’தான்.

இந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இந்த முயற்சியின் மூலம், இதுவரை சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களைச் சென்றடைந்திருக்கிறார்கள் இந்த ‘பேர்ட் எஜுக்கேட்டர்ஸ்’. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள், பறவை போதனையாளர்கள்!

பறவைகளைப் போலவே, உங்கள் வானமும் விரிய வாழ்த்துகள்!

எளிமையான கையேடு!

இதுபோன்ற ‘பேர்ட் எஜுக்கேட்டர்ஸ்’களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், முறையான கல்விச் சாதனங்கள் கிடைக்காததுதான். குறிப்பாகக் குழந்தைகளைக் கவரும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய அளவிலான பறவைக் கையேடுகள் இல்லாமல் இருப்பது பறவைகளுக்கும் குழந்தைகளுக்குமான இடைவெளியை அதிகரிக்கிறது.

இதைப் போக்க மைசூரில் உள்ள ‘இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை’, ‘தமிழகப் பறவைகள்’ என்கிற தலைப்பில் சிறிய கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பரவலாகத் தென்படும் சுமார் 138 பறவைகளின் படமும், பெயரும், அவற்றின் வாழிடங்கள் குறித்த சிறு குறிப்பும் இதில் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலத்திலிருந்து பறவைகளின் குறிப்பை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் பறவையியலாளர் ப.ஜெகநாதன். பறவைகளின் ஓவியங்கள், க்ரிம்மெட் பறவைக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்தக் குறுங்கையேடு, ஏலகிரியில் நடந்த பறவையியலாளர்கள் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

சுமார் 25 ரூபாய் விலை கொண்ட இந்தக் கையேட்டை, www.early-bird.in என்ற வலைத்தளத்துக்குச் சென்று வாங்கலாம். பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு, இந்தக் கையேட்டை இலவசமாக வழங்கவும் அந்த அறக்கட்டளை தயாராக உள்ளது!

பத்துலட்சம் பதிவுகள்!

தங்கள் பகுதியில் உள்ள பறவைகளைப் பற்றி ‘ஈபேர்ட்’ எனும் வலைத்தளத்தில் பறவை ஆர்வலர்கள் பதிவுசெய்வது வழக்கம். இந்த வலைத்தளத்தை, அமெரிக்காவில் உள்ள ‘தி கார்னெல் லேப் ஆஃப் ஆர்னிதாலஜி’, ‘நேஷனல் ஆதுபான் சொஸைட்டி’ ஆகியவை இணைந்து 2002-ம் ஆண்டில் உருவாக்கின.

இந்த வலைத்தளத்தின் இந்தியப் பதிப்பு ‘ஈபேர்ட் இந்தியா’ எனும் பெயரில் 2014-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் 5 லட்சம் பறவைப் பதிவுகளைக் கடந்தது இந்தியா. 2015-ல் இன்னொரு 5 லட்சம் பறவைப் பதிவுகளைக் கடந்தது.

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம், கேரள மாநிலம் பத்து லட்சம் பறவைப் பதிவுகளைக் கடந்தது. நாட்டிலேயே அவ்வளவு பறவைப் பதிவுகளைக் கடந்த முதல் மாநிலம் அதுதான். தொடர்ந்து 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், கர்நாடக மாநிலம் பத்து லட்சம் பறவைப் பதிவுகளைக் கடந்த இரண்டாவது மாநிலம் எனும் பெருமையைப் பெற்றது.

தற்போது, பத்து லட்சம் பறவைப் பதிவுகளைக் கடந்த மூன்றாவது மாநிலம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது தமிழகம். இதில், 2 லட்சத்து 93 ஆயிரத்து 242 பதிவுகளுடன் கோவை மாவட்டம் தமிழகத்துக்குள் முதலிடத்தையும் பிடித்துள்ளது!Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x