

முதுமலை: ரேடியோ காலர் அறுந்துவிழுந்து கண்காணிப்பில் இருந்து விலகிய‘விநாயகன்' யானையை, கர்நாடகாவில் மயக்க ஊசி செலுத்தி அம்மாநில வனத்துறையினர் பிடித்து முகாமுக்கு கொண்டு சென்றனர்.
கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி சுற்றித்திரிந்த விநாயகன் யானை, கடந்த 2018-ம் ஆண்டு மயக்கம் ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது. அங்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ரேடியோ காலர் அறுந்து விழுந்ததால், யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினரால் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, முதுமலை வனப்பகுதியை ஒட்டிய மதுரை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் புகுந்து வாழை, தென்னை, பாக்கு மரங்களை இந்த யானை சேதப்படுத்தி வந்தது. பின்னர் அங்கிருந்து தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட வன எல்லை கிராமங்களில் சுற்றித்திரிந்தது.
கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட வனத்துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சவுடனஹள்ளி உட்பட பல்வேறு கிராமங்களுக்குள் விநாயகன் யானைபுகுந்து, விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்புகளுக்கு ஆளாகி வந்தனர். யானையை பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.
இதையடுத்து, கர்நாடகா வனத்துறையினர் நேற்று முன்தினம் மாலை இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர். அதன் படி, பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட குந்தகெரே வனச்சரக பகுதியில், விநாயகன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
இது தொடர்பாக கர்நாடகா வனத்துறையினர் கூறும்போது, "மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை, அருகே உள்ள ராமபுரா முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த யானை, வளர்ப்பு யானையாக பழக்கப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட உள்ளது" என்றனர். இந்நிலையில், இந்த யானையால் பாதிக்கப்பட்ட கூடலூரை அடுத்த மதுரை ஊராட்சிக்குட்பட்ட கிராமமக்களும், தேவர் சோலை சுற்றுவட்டார வன எல்லை கிராம மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதேபோல தேவாலா, பாடந்துறை, நாடுகாணி, செலுக்காடி பகுதிகளில் இரவு நேரங்களில் புகுந்து 50-க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி அரிசி தானியங்களை சாப்பிட்டு வந்த அரிசி ராஜா யானை, கேரளா மாநிலம் சுல்தான் பத்தேரி நகருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தியது. இதைத்தொடர்ந்து கேரளா வனத்துறையினர் மயக்க மயக்க ஊசி செலுத்தி பிடித்து, தங்கள் பாதுகாப்புக்கு கொண்டு சென்றனர்.
வன எல்லைகளில் வசிக்கும் தமிழக கிராம மக்களின் கோரிக்கையை தமிழக வனத்துறையினர் நிராகரித்த நிலையில், அந்த 2 யானைகளுமே வேறு மாநிலத்தில் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.