

நாகர்கோவில்: அரிசி கொம்பன் யானை கன்னியா குமரி மாவட்ட வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள நிலையில், அதனுடைய நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக- கேரள மக்களை அச்சுறுத்திய அரிசி கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இந்த யானையை திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள அப்பர் கோதையாறு பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.
அதன் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியான பேச்சிப்பாறை அருகே உள்ள முத்துக் குழி வயல், தச்சமலை, குற்றியாறு பகுதிகளுக்கு அரிசி கொம்பன் இடம் பெயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. தச்சமலையில் வசிக்கும் பழங்குடியின மக்கள் யானையின் இருப்பிடத்தை மாற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ‘மக்கள் அச்சப்பட தேவையில்லை, வனத்தை விட்டு அரிசி கொம்பன் வெளியில் வர வாய்ப்பில்லை’ என, வனத்துறை தெரிவித்து வருகிறது.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறும்போது, “அரிசி கொம்பன் யானையை கன்னியாகுமரி வனப்பகுதியில் 4 வனஅதிகாரிகள், 10 வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அரிசி கொம்பன் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் கருவியில் இருந்து சிக்னல் பெறக்கூடிய தொழில்நுட்பத்தை கன்னியாகுமரி மாவட்ட வனத்துறைக்கு கேட்டிருந்தோம்.
இன்று (நேற்று) அந்த கருவி கிடைத்தது. ரேடியோ காலர் சிக்னலை தற்போது கவனித்து வருகிறோம். கடந்த 36 மணி நேரமாக அரிசி கொம்பன் நடவடிக்கை திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. வனப்பகுதி மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்றார்.