

சிவகங்கை: இளையான்குடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தனது சொந்த செலவில் 20,000 பனை விதைகள், 10,000 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். அவரை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர் எஸ்.அப்துல் மாலிக் (43). கூலித் தொழிலாளியான இவர், யார் உதவியையும் எதிர்பாராமல் தனது சொந்த செலவில் மரக்கன்றுகளையும், பனை விதைகளையும் நடவு செய்து வருகிறார்.
இளையான்குடி, சிறுவாலை, சாலையூர், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் 10,000 மரக்கன்றுகளை நடவு செய்து கம்பி வேலி அமைத்து பராமரித்து வருகிறார்.
கடந்த ஆண்டு இளையான்குடி பகுதியில் உள்ள கண்மாய் கரைகளில் 20,000 பனை விதைகளை நடவு செய்தார். மேலும் அவர் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வாகன புகையால் ஏற்படும் பாதிப்பை எடுத்துக் கூறி, சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இவரது செயல்பாட்டை பாராட்டி சமீபத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பசுமை முதன்மையாளர் விருது மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கி கவுரவித்தது.
இதுகுறித்து எஸ்.அப்துல் மாலிக் கூறியதாவது: சுற்றுச்சூழலை பாதுகாக்க என்னால் முடிந்த செயல்களில் ஈடுபடுகிறேன். நான் மாதத்தில் 4 நாட்கள் மரக்கன்றுகள், பனை விதை நடுவதற்கு செலவிடுவேன். இதற்காக ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து வைத்துவிடுவேன்.
எனது பணியை ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர்களாக இருந்த ஜெயகாந்தன், மதுசூதன்ரெட்டி ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர். தற்போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விருது அளித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.
எனக்கு விருதுடன் வழங்கப்பட்ட ரூ.1 லட்சத்தையும் மரக்கன்றுகள், பனை விதைகள் நடுவதற்கே செலவிட உள்ளேன். என்னை பார்த்து மாணவர்கள், இளைஞர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை காட்ட வேண்டும் என்பது தான் எனது ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.