Published : 07 Jun 2023 06:04 AM
Last Updated : 07 Jun 2023 06:04 AM

தின்பண்ட பிளாஸ்டிக் கவர்களால் மலைபோல் சேரும் குப்பை: மாற்றுவழி காண சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் சிறைவாசிகளை சந்திக்க வரும் உறவினர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் பழங்கள், இனிப்பு, காரம் உள்ளிட்ட தின்பண்டங்களை கொண்டுவருவதால் மலைபோல் குப்பை தேங்குவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என சுமார் 650-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை சந்திக்க உறவினர்களுக்கு திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை அனுமதி அளிக்கப்படுகிறது. அதுவும், விசாரணை கைதிகளை திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளிலும், தண்டனை கைதிகளை செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமைகளில் உறவினர்கள் சந்தித்து பேசலாம். சனிக்கிழமைகளில் வழக்கறிஞர்கள் மட்டும் சந்திக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

பொதுவாக சிறைவாசிகளை பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள் பழங்கள் மற்றும் இனிப்பு, காரம் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கி வந்து கொடுப்பது வழக்கம். கொடுப்பதில் பாதி மட்டுமே கைதிகளுக்கு செல்லும் என்பதால் அதற்கேற்ப சற்று அதிகமாக வாங்கி வருவார்கள்.

அப்படி கொண்டு வரப்படும் பழங்கள், தின்பண்டங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் உள்ளது. அவற்றை சிறை வளாகத்தில் மொத்தமாக மலைபோல் கொட்டிவைத்து, பின்னர் மாநகராட்சி டிராக்டர்களில் அள்ளிச் செல்வதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய சிறையில் மட்டும் ஏன் தாராளமாக அனுமதி அளிக்கப்படுகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்து பெயர் கூற விரும்பாத சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘தமிழகத் தில் பிளாஸ்டிக் தடையால் மஞ்சப்பை திட்டம் அமலில் உள்ளது. இதை பொதுமக்கள் மத்தியில் அதிகாரிகள் கொஞ்சம், கொஞ்சமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால், வேலூர் மத்திய சிறை வளாகம் பிளாஸ்டிக்கை வரவேற்கும் விதமாக உள்ளது. அவர்கள் நினைத்தால் சிறை வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கலாம். இதற்கான மாற்று வழிகளை சிறை அதிகாரிகள் கொண்டுவர வேண்டும்’’ என்றனர்.

வேலூர் மத்திய சிறை காவலர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘வேலூர் மத்திய சிறையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்படுகின்றனர். அத்துடன், சென்னை, காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தண்டனை கைதிகளும் அடைக்கப்படுகின்றனர்.

இவர்களை பார்க்க வரும் உறவினர்கள் பெரும்பாலும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளனர். அவர்கள் கொண்டு வரும் பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பைகளில் மட்டுமே எடுத்து வருகின்றனர். இதனால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை’’ என்றனர்.

இது தொடர்பாக வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மானிடம் கேட்டதற்கு, ‘‘சிறைவாசிகளின் உறவினர்கள் கொண்டு வரும் பொருட்களை சோதனைச் சாவடி பகுதியில் பிரித்து ஒரு துணிப்பையில் போட்டு டோக்கன் வழங்கி விடுகிறோம். அந்த டோக்கனை சிறைவாசிகளிடம் அவர்கள் கொடுத்து விடுவார்கள். துணிப்பையில் போடப்பட்ட தின்பண்டங்கள், பழங்கள் அனைத்தும் ஸ்கேன் செய்து உள்ளே கொண்டு செல்லப்படும்.

அங்கு டோக்கனை கொடுத்து சிறைவாசிக்கான பொருட்களை வாங்கிக்கொள்வார். இதில், மிக்சர், பக்கோடா போன்ற எண்ணெய் தயாரிப்புகளை பிளாஸ்டிக் கவரில் கொண்டுவருவதை தவிர்க்க முடிவதில்லை. விரைவில் வேலூர் மத்திய சிறை வளாகம் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து விழிப்புணர்வு பலகை வைக்கப்படும்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x