

விருதுநகர்: திருநெல்வேலி செல்லும் வழியில் கொளுத்தும் வெயிலை சமாளிக்க அரிசிக்கொம்பன் யானை விருதுநகரில் இன்று குளியல் போட்டது.
தேனி மாவட்டத்தில் ராயப்பன்பட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சண்முகா நதி அணை பகுதியில் கடந்த சில நாள்களாக அரிசிக்கொம்பன் யானை சுற்றித் திரிந்தது. ஊருக்குள் புகுந்த யானை அட்டகாசம் செய்தது. இந்த யானையைப் பிடிக்க வனத் துறையினர் தொடர்ந்து முயற்சித்து வந்தனர். இந்நிலையில், அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி இன்று அதிகாலை வனத் துறையினர் பிடித்தனர்.
பிடிபட்ட அரிசிக் கொம்பன் யானை மிகுந்த பாதுகாப்புடன் வனத் துறை லாரியில் ஏற்றப்பட்டு இன்று திருநெல்வேலி கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து பின்னர், கேரளா வனப்பகுதிக்குள் மேகமலை பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி செல்லும் வழியில் பிற்பகல் விருதுநகர் வந்த அரிசிக்கொம்பன் யானையை ஏற்றி வந்த லாரி விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பாஜக அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டது. அங்கு, கொளுத்தும் வெயிலை அரிசிக்கொம்பன் யானை சமாளிக்க தீயணைப்புத் துறை வாகனத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து யானை குளிப்பாட்டப்பட்டது. பின்னர், வனத் துறை மற்றும் காவல் துறை வாகனங்கள் பாதுகாப்புடன் மீண்டும் புறப்பட்டு அரிசிக்கொம்பன் யானை திருநெல்வேலி கொண்டு செல்லப்பட்டது.