

உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் சார்பில் வெளிநாட்டு பறவைகள் அடங்கிய பூங்கா சமீபத்தில் திறக்கப்பட்டது. இங்கு மக்காவ் உட்பட பல்வேறு வகை கிளிகள், வெளிநாட்டு பறவைகள் உள்ளன. இதேபோல, தையோகா வாத்து, பென்சச் குருவிகள், கலிபோர்னியா காடைகள் உள்ளிட்ட பறவைகள், பறக்கும் அணில்கள் உள்ளன.
இங்குள்ள கிளிகள் மற்றும் பறவைகள் மனிதர்களுடன் சகஜமாக பழகுகின்றன. மேலும், மனிதர்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து அவர்கள் மீது அமர்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இந்த பூங்காவுக்கு வந்து, பல்வேறு வண்ண கிளிகள் மற்றும் பறவைகளை ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.
மேலும் செல்பி, புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியடைகின்றனர். இந்நிலையில், அந்த பூங்காவில் வன உயிரினங்கள் பாதுகாப்பு அட்டவணையில் இடம்பெற்றுள்ள மாண்டரின் இன வாத்துகள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பறவை ஆர்வலர்கள் அளித்த புகாரின்பேரில், வனத்துறையினர் விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட பூங்காவுக்கு சென்று ஒரு ஜோடி மாண்டரின் வாத்துகளை பறிமுதல் செய்தனர்.
நீலகிரி கோட்ட வன அலுவலர் கவுதம் கூறும்போது, "மாண்டரின் வாத்துகள் முதலில் வெளிநாட்டு பறவைகள் பட்டியலில் இருந்தது. ஆனால், சமீபத்தில் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படிஅட்டவணைப்படுத்தப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றது.
எனவே, இந்த வாத்துகளை பறிமுதல் செய்து தனியார் பூங்காவின் ஓர் இடத்தில், வனத்துறை கட்டுப்பாட்டில் தனிமையில் வைத்துள்ளோம். விரைவில் இந்த வாத்துகள் அரசு உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்படும்" என்றார்.