

தருமபுரி: தருமபுரியில் ஆக்கிரமிப்பாலும், கழிவுநீர் கலப்பதாலும் பொலிவிழந்து கிடக்கும் சனத் குமார் நதியை மீட்டெடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தருமபுரியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் வத்தல்மலை உள்ளது. இந்த மலையில் இருந்து மழைக்காலங்களில் கீழிறங்கும் தண்ணீர் சனத்குமார் நதியாக மாறி பூமரத்தூர், வெங்கட்டம்பட்டி வழியாக தருமபுரி வந்தடைந்து புளுதிகரை, கிருஷ்ணாபுரம் வழியாக கம்பைநல்லூர் பகுதி வரை சென்று தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நதி அதன் இயற்கை தன்மை மாறாமல் இருந்தது.
ஆக்கிரமிப்பும், கழிவுநீரும்: நாளடைவில் பல இடங்களில் சனத்குமார் நதி ஆக்கிரமிப்பில் சிக்கியது. இதுதவிர, தருமபுரி நகரையொட்டி ஓடும் சனத் குமார் நதியில், தருமபுரி நகரின் பெரும்பகுதி குடியிருப்புகளின் கழிவுநீர் கலக்கிறது. இந்த காரணங்களால் நதி அதன் அகலத்தை இழந்தும், தூய்மையை இழந்தும் சீரழிந்து கிடக்கிறது.
இந்த நதியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்து பழைய பொலிவுடன் மேம்படுத்த வேண்டுமென தொடர்ந்து பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கிடையில், கடந்த அதிமுக ஆட்சி முடிவுறும் தருவாயில் சனத்குமார் நதியை தூய்மைப்படுத்தி மீட்டெடுக்கும் பணி ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்பணிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
மீட்டெடுக்க கோரிக்கை: இந்நிலையில், சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சனத்குமார் நதியில் ஓடும் நீரில் மீன்கள் துள்ளி விளையாடும். மாலை நேரங்களில் தருமபுரி நகர மக்களில் பலர் இந்த நதியோரம் காலாற நடந்து நதியழகை ரசித்து இளைப்பாறிச் செல்வர். நகர விரிவாக்கத்தால் குடியிருப்புகளின் கழிவுநீர் சனத்குமார நதியில் சேர்ந்ததாலும், பல இடங்களில் ஆக்கிரமிப்பில் நதி சிக்கியதாலும் அதன் அடையாளங்கள் முழுமையாக மறைந்து கிடக்கிறது.
தற்போதும் கூட கன மழைக்காலங்களில் ஓரிரு மாதங்கள் இந்த நதியில் தண்ணீர் ஓடினாலும், அந்த நீரில் அதிக அளவு கழிவுநீரும் கலந்து விடுவதால் நதியோர விளைநிலங்களுக்கு இந்த நீரை பாய்ச்ச விவசாயிகளும் முன்வருவதில்லை. எனவே, தருமபுரியைச் சேர்ந்த பலரின் எதிர்பார்ப்பாக உள்ள சனத்குமார நதி மீட்புப் பணியை தற்போதாவது அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். கழிவுநீருக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து, நதியை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு எல்லைக் கற்கள் நட்டு பராமரிக்க வேண்டும், என்றனர்.