

மதுரை: காடு செழித்தால் நாடு செழிக்கும் என்று கூறப்படுவதற்கு ஏற்ப காடுகள், காட்டுயிர்கள், தமிழர்களின் தொல்லியல் பண்பாட்டுச் சின்னங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், ஆவணப்படுத்தவும் வழிகாட்டி வருகிறார் வெளிநாட்டில் வேலை பார்த்த பொறியாளர்.
மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்தவர் வெ.பாலமுரளி (55). இவர் 1987-ல் ரஷ்யாவில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். படிப்பை முடித்த பின்பு 1992-ல் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவில் பொறியாளராகப் பணியை தொடங்கினார். 2010-ல் பணியாற்றிய நிறுவனத்திலேயே பதவி உயர்வு பெற்று தலைமைச் செயல் அதிகாரியானார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 2 நிறுவனங்களை நிர்வகிக்கும் இயக்குநராக பொறுப்பேற்றார். பணியிலிருக்கும்போதே காடுகளுக்குச் செல்வதிலும், அங்கு கானுயிர்களை புகைப்படங்களை எடுப்பதிலும் ஆர்வம் காட்டினார். எடுத்த புகைப்படங்களை கண்காட்சி நடத்தி அதன் மூலம் கிடைத்த வருமானத்தை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கி வந்தார்.
இந்நிலையில், தமிழர்களின் தொன்மைச் சான்றுகளை ஆவணப்படுத்துவதற்காக தொல்லியல் பட்டயப் படிப்பு படித்து இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டி வருகிறார்.
இதுகுறித்து வெ.பாலமுரளி கூறியதாவது: காடுகளும், காட்டுயிர்களும் செழிப்போடு இருந்தால்தான் நாடும், நாட்டு மக்களும் இயற்கை வளங்களோடு வாழ முடியும். காடுகள், விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பணியிலிருக்கும்போதே காடுகளுக்குச் சென்று போட்டோக்கள், வீடியோக்கள் மூலம் ஆவணப்படுத்தினேன். விலங்குகளை பற்றி அறிந்து கொண்டு அது பற்றிய எனது சொந்த அனுபவங்களை கட்டுரைகளாக எழுதி வருகிறேன்.
தமிழின் தொன்மைச் சின்னங்களான பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள் குறித்து ஆராய்ந்து ஆவணப்படுத்துவதற்காக வெளிநாட்டு வேலையிலிருந்து 2020-ல் விருப்ப ஓய்வு பெற்று சொந்த ஊரான மதுரைக்கு வந்தேன்.
தமிழின் தொன்மை குறித்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், தொல்லியல் இடங்களுக்குச் சென்று தமிழி கல்வெட்டுகளையும், பாறை ஓவியங்களையும் ஆராய்ந்து அவற்றை ஆவணப்படுத்தி வருகிறேன்.
இதுவரை கேனான் மற்றும் நேஷனல் ஜியாக்ரஃபி இணைந்து நடத்திய புகைப்படப் போட்டியில் ஒரு விருது, க்ரோமேட்டிக் என்னும் ஒரு லண்டன் நிறுவனம் நடத்திய புகைப்படப் போட்டியில் 2 விருதுகள், டிராவல் என்னும் கென்யா மாத இதழ் நடத்திய புகைப்படப் போட்டியில் ஒரு விருது கிடைத்துள்ளது.
கென்யா, தான்சானியா மற்றும் ஜெர்மனியில் புகைப்படக் கண்காட்சியில் கிடைத்த வருமானத்தை மதுரையிலுள்ள மனநலம் குன்றிய குழந்தைகளின் இல்லத்தின் வளர்ச்சிக்கு அளித்தேன். இதுவரை 50 நாடுகளுக்கும் மேலாகப் பயணித்து விட்டேன். இளம் தலைமுறையினர் காடுகள், கானுயிர்கள் பற்றி அறிந்துகொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.