Last Updated : 09 Mar, 2021 03:11 AM

 

Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 03:11 AM

187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம்; கூட்டணி கட்சிகளின் நெருக்கடியை தவிர்க்க அதிக இடங்களில் திமுக போட்டி

சட்டப்பேரவைத் தேர்தலில் 187 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி கட்சிகளின் நெருக்கடியை தவிர்க்கவே அதிக இடங்களில் திமுக போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 1-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட், மதிமுகவுக்கு தலா 6 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. நேற்று மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதோடு சேர்த்து, திமுக கூட்டணியில் இதுவரை 10 கட்சிகளுக்கு 57 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள், ம.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டணி கட்சிகள் அவர்களுக்கான சின்னத்தில் 47 தொகுதிகளில் போட்டியிடுவார்கள். தற்போதைய நிலையில் 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலை உள்ளது. மேலும் கூட்டணியில் சேரும் சிறிய கட்சிகளும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவார்கள் என்று திமுகவினர் தெரிவித்துள்ளனர்.

அதிகபட்சமாக 1977 பேரவைத் தேர்தலில் திமுக 230 தொகுதிகளில் போட்டியிட்டு 48-ல் வென்றது. அந்தத் தேர்தலில் அதிமுக வென்றது. எம்ஜிஆர் முதல்வரானார். 1971 தேர்தலில் 203 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 184 தொகுதிகளில் வென்றது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் ஒரு கட்சி வென்ற அதிக இடங்கள் இதுதான். மிகக் குறைவாக 1980 பேரவைத் தேர்தலில் திமுக 112 தொகுதிகளில் போட்டியிட்டு 37-ல் வென்றது. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 1989-ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 202 இடங்களில் போட்டியிட்ட திமுக 150-ல் வென்று 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தது.

1967-ல் 174, 1991-ல் 176, 1996-ல் 182, 2001-ல் 183 என்று அதிக தொகுதிகளில் போட்டியிட்ட திமுக, 2006-ல் 132, 2011-ல் 124 என்று குறைவான தொகுதிகளில் போட்டியிட்டது. கடந்த 2016-ல் 180 தொகுதிகளில் போட்டியிட்டு 88-ல் திமுக வென்றது. 2006-ல் கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கிவிட்டு 132 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 96-ல் மட்டுமே வென்றது. இதனால் காங்கிரஸ், பாமக தயவுடன் ஆட்சி நடத்த வேண்டிய நிலை திமுகவுக்கு ஏற்பட்டது. கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பால் பல்வேறு திட்டங்களை திமுக அரசால் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இலங்கைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சட்டப்பேரவையில் திமுகவுக்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுத்தது.

கூட்டணி கட்சிகளின் நெருக்கடியால் காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை திமுக வழங்க வேண்டி வந்தது. இந்த முறை அதுபோன்ற நிலை வந்து விடக் கூடாது என்பதற்காகவே கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்களை திமுக வழங்கியுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x