Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 03:11 AM

சிறிய கட்சிகளுக்கு அதிமுக தந்த அதிர்ச்சி

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கூட்டணி பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிமுக தலைமை தீவிரம் காட்டி வருகிறது. பாமகவுக்கு 23 தொகுதிகளும் பாஜக-வுக்கு 20 தொகுதிகளும் பங்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறிய கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் அதிமுக இறங்கியது. ஆனால், பேச்சுவார்த்தையில் பங்கேற்ற சிறிய கட்சி தலைவர்கள் அதிமுக கூட்டணியில் 3-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டு தலைமையை அதிர்ச்சியடைய செய்தனர்.

நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சி 5 தொகுதிகளையும், புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் 5, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் 5, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி 3, தமிழ் மாநில முஸ்லீம் லீக்கின் தலைவர் ஷேக் தாவுத் 3, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் தனபாலன் 5, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் 9, பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி 3 தொகுதிகளையும் கேட்டன.

இதனால், அதிர்ச்சியடைந்த அதிமுக தலைமை சிறிய கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை நிறுத்தியுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் பழனிசாமி சிறிய கட்சி தலைவர்களை சந்திக்க நேரம் ஒதுக்குவதில்லை. அதேநேரத்தில், பேச்சுவார்த்தை குழுவிடம் இருந்தும் சிறிய கட்சிகளுக்கு இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை.

முன்னதாக, தொகுதி பங்கீடு கேட்ட கட்சிகளின் பெயரை, ‘அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள்’ என்ற பெயரில் அறிவிப்பை வெளியிட்டு, 13 சிறிய கட்சிகளுக்கும் அதிமுக தலைமை அதிர்ச்சி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x