Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 03:11 AM

வேட்பாளர் தேர்வில் இபிஎஸ்- ஓபிஎஸ் இடையே மோதல்

சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் மார்ச் 12-ம் தேதி தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு, தேர்தல் தொகுதி பங்கீட்டை முடிப்பதில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கெனவே, பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம், தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.

இதற்கிடையில், அதிமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 5-ம் தேதி வெளியானது. இதில், ஓ.பன்னீர்செல்வம் - போடிநாயக்கனூர், முதல்வர் பழனிசாமி- எடப்பாடி, ஜெயக்குமார் - ராயபுரம், சி.வி.சண்முகம் - விழுப்புரம், எஸ்.பி.சண்முகநாதன் - ஸ்ரீவைகுண்டம், எஸ்.தேன்மொழி - நிலக்கோட்டை (தனி) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் மறுநாளே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்பட்டியலை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, அதிமுக தலைமை மாவட்ட செயலாளர்களுடன் கடந்த 5-ம் தேதி நடத்திய ஆலோசனையில் ஒரு தொகுதிக்கு 3 பேர் பெயர்களை பரிந்துரைக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாவட்ட செயலாளர்கள் தங்களுக்கு உட்பட்ட தொகுதிகளுக்கு தலா 3 பெயரை பரிந்துரை செய்தனர்.

இந்நிலையில், அதில் வேட்பாளராக ஒருவரை யார் தேர்வு செய்வது என்பதில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, தாங்கள் சொல்லும் நபரை வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் சிலர் முதல்வரை அணுகியுள்ளனர்.

இதுதவிர, அதிமுகவில் இருந்து தினகரனுக்கு ஆதரவளித்ததால் இடைநீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் சிலர் மீண்டும் அதிமுகவுக்கு வந்துவிட்டனர். நேற்று முன்தினம் இறுதியாக, சாத்தூர் முன்னாள் எம்எல்ஏவான எதிர்க்கோட்டை எஸ்.ஜி.சுப்பிரமணியன் முதல்வர், துணை முதல்வரை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

இவர்களில் குறிப்பிட்ட சிலருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க முதல்வர் தரப்பு வற்புறுத்தி வருவதாகவும், அதற்கு ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக வேட்பாளர் தேர்வில் இருதரப்புக்கும் இடையில் மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையில், அதிமுகவுக்கு வாய்ப்பான தொகுதிகளில் சிலவற்றை கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக கட்சிகள் கேட்பதால் இதிலும் முடிவெடுக்க முடிவில்லை. இதனால் அதிமுகவில் குழப்பம் நீடித்து வருகிறது.

இதற்கிடையில், அதிருப்தியில் உள்ள மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ் மற்றும் முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச அவர்கள் இல்லங்களுக்கு நேற்று வந்தனர். வேட்பாளர் தேர்வு தொடர்பாக இழுபறி நீடிக்கும் நிலையில், அமைச்சர்கள் தங்களுக்காவது தொகுதியை ஒதுக்கி வேட்பாளர்களாக அறிவிக்கும் படி இருதரப்புக்கும் நெருக்கடி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற அதே நிகழ்வை நேற்றும் காண முடிந்தது. அமைச்சர்கள் 16 பேர் முதல்வர் பழனிசாமியையும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்தையும் மாறி மாறி சந்தித்தனர். அவர்களிடம், ‘கட்சியின் சீனியர்கள் நீங்களே இப்படி செய்தால், 2-ம் கட்ட நிர்வாகிகளை எப்படி சமாளிப்பது’ என்று பன்னீர்செல்வமும் முதல்வர் பழனிசாமியும் கோபமாக பேசியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், நேற்று மாலை இருவரும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். அடுத்த கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது குறித்தும், தேர்தல் அறிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x