Last Updated : 08 Mar, 2021 03:56 AM

 

Published : 08 Mar 2021 03:56 AM
Last Updated : 08 Mar 2021 03:56 AM

தொகுதி பங்கீட்டை முடிக்க முடியாமல் தவிக்கும் பாஜக - முடிவை அறிவிக்காமலேயே களத்தில் இறங்கும் என்ஆர் காங்கிரஸ்

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலைப் போல முடிவை அறிவிக்காமலேயே வரும் தேர்தலிலும் தனித்து போட்டியிட என்ஆர் காங்கிரஸ் தயாராகி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரங்கசாமியிடமிருந்து வெளிப்படையான அறிவிப்பு வராததால் தொகுதி பங்கீட்டை முடிக்க முடியாமல் பாஜக தவித்து வருவதுடன் ரங்கசாமிக்காக தொடர்ந்து காத்திருக்கிறது.

புதுவையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. ஆனால் புதுவை அரசியலில் நாள்தோறும் விறுவிறுப்பு அதிகரித்தே வருகிறது. தற்போது புதுவை காங்கிரஸ் - திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவாகிவிட்டது. ஆனால் புதுவைக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. என்ஆர் காங்கிரஸ் முடிவை அறிவிக்காமல் இருப்பதால் பாஜக தவிப்பில் உள்ளது. இதனால் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜகவால் வெளிப்படையாக வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவிடம் கூட்டணி தொடர்பாக கேட்டதற்கு, “கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்று அல்லது நாளைக்குள் முடிவு அறிவிக்கப்படும். புதுவை மக்களுக்கு எது நல்லது என அவர்கள் (என்ஆர் காங்) முடிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

மாநிலத் தலைவர் சாமிநாதனிடம் கேட்டதற்கு, “பாஜக கூட்டணியில் இன்று வரை என்ஆர் காங்கிரஸ் இருக்கிறது. ரங்கசாமி நல்ல முடிவு எடுப்பார்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தேசியக் கட்சியான பாஜக, ரங்கசாமிக்காக காத்திருப்பதே தற்போதைய நிலையாகும்.

தனித்து போட்டியா?

பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் ஏற்பட்ட இழுபறியால் ரங்கசாமி மவுனமாகவே உள்ளார்.

இதற்கிடையே, காலாப்பட்டு என்ஆர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அவர் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என தெரிகிறது. இதேபோன்று, ஏனாமில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் எஸ்பி பைரவசாமி பாஜகவில் இணைந்துள்ளதார்.

என்ஆர் காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, “கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தரப்பு என்ஆர் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க விரும்பியது. பலரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ரங்கசாமி மவுனமாக இருந்ததால் பாஜக கூட்டணி அமைக்கவில்லை. அதே நிலைதான் வரும் தேர்தலிலும் ஏற்படும் என தெரிகிறது. வழக்கமாகவே ரங்கசாமி எந்த ஒரு முடிவையும் வெளிப்படையாக தெரிவிக்கமாட்டார். வேட்பு மனுத்தாக்கலின் இறுதிநாள் வரை வேட்பாளர்களை அறிவிக்காமல் காலம் கடத்தியுள்ளார். இதனால், தனித்து போட்டியிடும் முடிவை அறிவிக்காமலேயே தேர்தல் களத்தில் இறங்குவார்” என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x