Last Updated : 07 Mar, 2021 03:14 AM

 

Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

தொகுதி உடன்பாடு ஏற்படாமல் தொடர்ந்து இழுபறி: மார்க்சிஸ்ட் கட்சி இன்று முக்கிய முடிவு

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி உடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. இரட்டை இலக்க எண்ணிக்கையில் தங்களுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி வந்த நிலையில், ஒற்றை இலக்கத்திலேயே தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்தது. ஆனால் இதனை ஏற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுத்து வருகிறது.

இந்த சூழலில் அடுத்து என்ன முடிவு எடுப்பது என்பது பற்றி விவாதிப்பதற்காக கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி நேற்று கூட்டியது. அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். அதே நேரத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் நேற்று காலை சந்தித்து இரண்டாம் கட்டமான பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த சந்திப்பிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள இந்த தேக்க நிலை பற்றி நேற்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. எனினும், கட்சியின் அதிகாரம் மிக்க அமைப்பான மாநிலக் குழுவில் விவாதித்த பிறகு கட்சியின் நிலைப்பாடு பற்றி முடிவு செய்யலாம் என செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்சியின் அவசரமான மாநிலக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

இதற்கிடையே நேற்று காலை திமுக குழுவுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “திமுக தரப்பில் எங்களுக்கு ஒதுக்கும் தொகுதிகள் பற்றி ஒரு எண்ணிக்கை சொல்கிறார்கள். அது எங்களுக்கு போதுமானது அல்ல என்று கூறி, நாங்கள் இன்னொரு எண்ணிக்கையை சொல்லியிருக்கிறோம். அது பற்றி அவர்கள் தலைவரிடம் பேசிவிட்டு சொல்வதாகக் கூறினார்கள். நாங்களும் எங்களது செயற்குழுவில் பேசி விட்டு கூறுகிறோம் என்று தெரிவித்திருக்கிறோம். அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். நல்ல முடிவு வந்தால் நல்லது” என்று கூறினார்.

அதன் பிறகு நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் கே.பாலகிருஷ்ணன் மீண்டும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் தற்போதைய பேச்சுவார்த்தை நிலவரம் பற்றி விவாதிக்கப்படும்” என்றார்.

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் எப்போது உடன்பாடு ஏற்படும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “இது எங்கள் கட்சி மட்டுமே முடிவெடுக்க வேண்டிய விஷயமல்ல. நாங்களும், திமுகவும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டியுள்ளது. ஆகவே, எப்போது உடன்பாடு ஏற்படும் என்பது பற்றி நாங்கள் சொல்ல முடியாது” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட அதிக எண்ணிக்கையில் தொகுதிகள் கேட்கிறீர்களா என்ற மற்றொரு கேள்விக்கு, “அந்தந்த கட்சிகளின் பலத்துக்கு ஏற்ப, அவர்கள் தொகுதிகளைக் கேட்கிறார்கள். நாங்கள் எங்கள் கட்சியின் பலத்துக்கு ஏற்ற எண்ணிக்கையில் தொகுதிகள் வேண்டும் என்று கேட்கிறோம். மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டு நாங்கள் எப்போதுமே பேசுவது இல்லை” என்று பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x