Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

அமைச்சர்களை எதிர்த்து பலம் வாய்ந்த வேட்பாளர்கள்: புது உத்தியை கையாள திமுக திட்டம்

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தவிர்த்து 28 அமைச்சர்கள் உள்ளனர். இதில் துணை முதல்வர் உட்பட பெரும்பாலான அமைச்சர்களை இந்தத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று திமுக கருதுகிறது. அதன் வெளிப்பாடாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது ‘அதிமுக அமைச்சர்களை தேர்தலில் தோற்கடிப்போம்’ எனப் பேசி வந்தார்.

அமைச்சர்கள் நிற்கும் தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளது. அமைச்சர்களுக்கு எதிராக நின்று தோற்றாலும், திமுகஆட்சி வந்ததும், தோற்றவர்களுக்கு முக்கிய பதவி கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியில் சில அமைச்சர்கள் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் தோற்றாலும் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை குறைய கூடாது என்பதற்காகத்தான் திமுக 170 தொகுதிகளுக்கு மேல் நிற்க விரும்புகிறது. இதன்மூலம் பெரும்பாலான அமைச்சர்களை தோற்கடித்து மக்கள் மத்தியில் அதிமுகவின் இமேஜை சரிக்கவும் திமுக தலைமை விரும்புகிறது.

ஒரு சில அமைச்சர் தொகுதிகளில் காங்கிரஸ், கம்யூ., உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அவர்களை திமுகவே வெற்றி பெற வைக்கவும் முடிவு செய்துள்ளது.

தென்மாவட்ட அமைச்சர்களில் ராஜேந்திரபாலாஜி, ஆர்பி உதயகுமார் ஆகியோர் திமுகவின் ஹிட் லிஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், இவர்கள் இருவரும் திமுக தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வந்தவர்கள். இவர்கள் இருவர் உட்பட தென்மாவட்டங்களில் அமைச்சர்களை எதிர்த்து பலமான வேட்பாளர்களை நிறுத்தி தோற்கடிக்க திமுக திட்டமிட்டுள்ளது.

அமைச்சர் ஆர்பி உதயகுமாரின் திருமங்கலம் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட திமுகவில் புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் சபாநாயகர் மகனுமான மணிமாறன், முன்னாள் எம்எல்ஏ லதா அதியமான் ஆகியோர் ‘சீட்’ கேட்டுள்ளனர். ஆனால், திமுக தலைமை ஆர்பி.உதயகுமாரை எதிர்த்து மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏவான வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தியை நிறுத்தலாமா என ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

2016 தேர்தலின்போது அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதனை திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் தொடர்ந்து நான்குமுறை வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சரான ஐ.பெரியசாமியை எதிர்த்து ஜெயலலிதா களமிறக்கினார்.இரு பெரும் மலைகள் மோதிக்கொண்டதில் நத்தம் விஸ்வநாதனை ஐ.பெரியசாமி தோற்கடித்து 5-வது முறையாக எம்எல்ஏவானார். அதுபோல, வரும் தேர்தலில் அமைச்சர்களை எதிர்த்து திமுகவில் முக்கியமான பலம் வாய்ந்த வேட்பாளர்களை நிறுத்த திமுக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x