Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

திமுக - இந்திய கம்யூனிஸ்ட் இன்று உடன்பாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று மாலை தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த முத்தரசன் தலைமையில் அண்ணா அறிவாலயம் வந்தனர். அப்போது அறிவாலயம் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை வரவேற்றார். படம்: ம.பிரபு

திமுகவுடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று (மார்ச் 5) கையெழுத்தாகும் என்று இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. அதில் சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுடன் இணைந்து பயணிக்கவும்,கூடுமானவரை 8 தொகுதிகள் வரை கேட்டு பெறவும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக, இந்திய கம்யூ, இடையேயான தொகுதி பங்கீடு குறித்து 2-ம்கட்ட பேச்சுவார்த்தை சென்னை அறிவாலயத்தில் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன்உட்பட 4பேர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைக்குபின் முத்தரசன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நிறைவு பெற்றுள்ளது. உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து ஒப்பந்தம் இன்று (மார்ச் 5) கையெழுத்தாக உள்ளது’’ என்றார்.

தொடர்ந்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனை, முத்தரசன் நேரில் சந்தித்து, ஆலோசனை நடத்தினார். தொகுதிப் பங்கீட்டில் திமுக காட்டும் கறார் தன்மை குறித்து விவாதித்துள்ளனர்.

இதேபோல், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பின் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கூறும்போது, ‘‘முதல்கட்ட பேச்சுவார்த்தையின் போது கூறியதையே தற்போதும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதிமுக தமிழகம் முழுவதும் பரவியுள்ள கட்சியாகும். எனவே, எங்களுக்கான உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று திமுகவிடம் வலியுறுத்தியுள்ளோம். அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை திமுகதான் முடிவுசெய்யும்’’என்றார்

இதற்கிடையே குறைந்தது 12 தொகுதிகள் வரை மதிமுக கேட்டுவருகிறது. ஆனால், 6 தொகுதிகள் வரையே திமுக தரப்பில் கூறப்படுவதால் சிக்கல் நீடிக்கிறது. ஒட்டுமொத்தமாக தொகுதி பங்கீட்டில் திமுக செயல்பாடுகள் கூட்டணி கட்சிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x