Published : 04 Mar 2021 05:51 AM
Last Updated : 04 Mar 2021 05:51 AM

சென்னையில் கமல்ஹாசன் பிரச்சாரம் தொடக்கம் : திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்தார்

சட்டப்பேரவை தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று சென்னையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திறந்த வேனில் நின்ற படி 26 இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று தேர்தலுக்கான செயல் திட்டங்களை கமல்ஹாசன் வெளியிட்டார். பெண்கள் நல்வாழ்வு, விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் ஆகிய 3 பிரிவுகளில் தலா 7 செயல் திட்டங்களை வெளியிட்டார்.

தொடர்ந்து, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அவருக்கு மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, கமல்ஹாசன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் வருமாறு:

மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதி கொடுக்கப்பட உள்ளது?

கூட்டணி பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். அவர்களோடு உட்கார்ந்து பேசி எத்தனை தொகுதிகள் என்பதை முதலில் முடிவு செய்து, அதன் பின்னர் முடிவெடுக்கப்படும்.

கூட்டணி என்று சொல்கிறீர்கள் வேளச்சேரி தொகுதியில் சரத்குமார் கட்சி போட்டியிடப் போவதாக அறிவித்து இருக்கிறார்களே?

அரசியலில் இது நடப்பது தான். ஆர்வத்தின் காரணமாக செய்யப்படுவது. மற்றபடி ஒருங்கிணைக்கப்பட்டு, விவாதத்துக்கு பிறகு சீரிய முறையில் அறிவிப்போம்.

சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சியுடன் உங்கள் கூட்டணி உறுதியாகிவிட்டதா?

இல்லை. இன்னும் நிறைய பேச்சுவார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் கைகுலுக்கிவிட்டோம் என்பது உண்மை.

தேசிய கட்சிகளுடன் கூட்டணி குறித்து ஏதாவது பேசினீர்களா? அல்லது அவர்கள் எதுவும் உங்களிடம் பேசினார்களா?

எனக்கு நல்லவர்களுடன் கூட்டணி வைக்க விருப்பம். மாற்றத்துக்கு யாரெல்லாம் உதவுவார்களோ அவர்களுடனும் கூட்டணி வைக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அதனையும் ஜாக்கிரதையாக செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஆலந்தூர் மெட்ரொ ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்ய கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து திறந்த வேனில் ஏறி நின்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கிருந்து மவுலிவாக்கத்தில் உள்ள பாய் கடை பகுதிக்கு கமல்ஹாசன் சென்றார். அங்கு, கமல்ஹாசன் திறந்த வேனில் நின்றவாறு பேசினார்.

இதனை தொடர்ந்து, கொளப்பாக்கம், மணப்பாக்கம், பட்டு ரோடு, கிண்டி ரேஸ் கோர்ஸ், சைதாபேட்டை ஐந்து விளக்கு, நந்தனம் சிக்னல், மயிலாப்பூர் லஸ் கார்னர் உள்ளிட்ட 26 இடங்களில் திறந்த வேனில் நின்ற படி வாக்கு சேகரிப்பு மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இரவு 8 மணியளவில் மயிலாப்பூர் மாங்கொல்லையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில், பங்கேற்று கமல்ஹாசன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x