Last Updated : 03 Mar, 2021 03:22 AM

 

Published : 03 Mar 2021 03:22 AM
Last Updated : 03 Mar 2021 03:22 AM

பாஜக, பாமக, தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி: அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்குவதில் சிக்கல்

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பாஜக, பாமக, தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. ஒரு சில தொகுதிகளை 3 கட்சிகளும் கேட்பதால் சிக்கல் உருவாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில், பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பாமகவுடன் உடன்பாடு எட்டப்பட்ட நாளிலேயே பாஜகவுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அன்றிரவே தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் அதிமுக நிர்வாகிகள் சந்தித்தனர்.

தொடர்ந்து, பிப்.28-ம் தேதி நள்ளிரவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பாஜகவுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், நேற்று முன்தினமும் எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில், அதிமுக - பாஜக இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, பாஜக குறிப்பிட்ட 20 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாலை அதே நட்சத்திர ஓட்டலில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அடங்கிய அதிமுக குழுவினருடன் பிற்பகல் 2.30 மணிக்கு பாஜக தரப்பில் இருந்து மாநில தலைவர் எல்.முருகன், பொறுப்பாளரும் மத்திய இணை அமைச்சருமான கிஷன் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாஜக ஏற்கெனவே கட்டாயம் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள தொகுதிகளுடன் சேர்த்து 30 தொகுதிகள் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. அதில் புதிதாக விழுப்புரம் மாவட்டத்தில் 2 தொகுதிகளை சேர்த்து கேட்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், 3.30 மணிக்கு பாமக தரப்பில் ஜி.கே.மணி, கே.பாலு மற்றும் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றதுடன், போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை இறுதி செய்ய கேட்டுக் கொண்டனர். ஆனால், அதில் சில தொகுதிகளை பாஜக கேட்பதால் நேரில் பேசி முடிவு செய்யுமாறு இருதரப்பையும் அதிமுக தரப்பு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், பாமக, பாஜக தரப்பினர் பிடிவாதமாக இருந்ததால், அடுத்தகட்டமாக பேசி இறுதி செய்யலாம் என நேற்றைய ஆலோசனையை இறுதி செய்துவிட்டு பாஜக தரப்பு மாலை 4.30 மணிக்கும், பாமகவினர் மாலை 5.30 மணிக்கும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

அதைத்தொடர்ந்து, மாலை 5.30 மணிக்கு தேமுதிக தரப்பில் இருந்து அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி மற்றும் இளங்கோவன் ஆகியோர் வந்து அதிமுக குழுவினருடன் பேசினர். அப்போது, பிரேமலதா அல்லது சுதீஷ் எனயாராவது ஒருவர் வந்தால் பேசி முடிவெடுக்கலாம் என்றும், சுதீஷ் வெளியிட்ட முகநூல் பதிவு குறித்தும் பேசப்பட்டது. இதுதவிர, தேமுதிக தரப்பில் பாமகவுக்கு இணையாக தொகுதிகள் வேண்டும் என கேட்கப்பட்டதற்கும் அதிமுக தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இருதரப்புக்கும் இடையில் காரசார விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதன்பின் இறுதியாக தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் ஒதுக்குவதாகவும், தலைமையிடம் கேட்டு அதற்கு பின் முடிவெடுக்கும் படியும் அதிமுக குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து கூட்டணி பேச்சுவார்த்தை 7 மணிக்கு முடிவடைந்து அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

அதிமுக கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான தமாகாவுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், இதுதவிர பாஜக, பாமக, தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு இன்று மாலைக்குள் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x