

மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மூன்றாவது அணிஅமைக்க முயற்சித்து வருகின்றன.
இது தொடர்பாக சமீபத்தில் கருத்துத் தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ‘மூன்றாவது அணி அமைந்தால் பாஜக கூட்டணிக்கு சாதகமாகிவிடும்’ என்று வெளிப்படையாகவே தனது கவலையை வெளியிட்டார். அவர் கூறியதில் உண்மையிருக்கிறது என்பதை உணர்ந்த திமுக - காங்கிரஸ் கூட்டணியினர், மூன்றாவது அணியின் நடவடிக்கைகளை சற்றுகலக்கத்துடன் பார்த்து வருகின்றனர்.
எண்ண ஓட்டம்
இதேபோல்தான், கடந்த 2016-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசி நேரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கின. இந்த மூனறாவது அணி பெற்ற வாக்குகளால் திமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனது. அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக அமோக வெற்றி பெற்றது. அதேநிலை வரும் தேர்தலிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் நினைக்கின்றனர். இவர்களின் எண்ண ஓட்டத்தைத்தான் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்துவதே தங்களின் லட்சியம் என பேசி வரும் இந்த மூன்றாவது அணி கட்சிகள், கள யதார்த்தத்தில் ஆட்சிக்கு எதிரான அதிருப்தியாளர்களின் வாக்குகளையே கணிசமாக அறுவடை செய்யும்.
இந்த வாக்குகள் அனைத்தும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டிய வாக்குகள். இதனால் திமுக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் அக்கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.
எனவே, இம்முறை மூன்றாவது அணி அமைந்துவிடக் கூடாது என்பதில் மற்ற எல்லோரையும்விட திமுக - காங்கிரஸ் கூட்டணியினர்தான் கவனமாக இருக்கின்றனர்.