Last Updated : 27 Feb, 2021 03:16 AM

 

Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

ரஜினிகாந்த் ரசிகர்களின் வாக்குகள் கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தார். அதற்கான வேலையும் நடைபெற்றது. ஆனால், அவர் கட்சி தொடங்குவாரா என்பது விவாதப் பொருளாகவே இருந்து வந்தது. இந்நிலையில், புதிய கட்சி தொடங்கப் போவதாகவும் அதற்கான அறிவிப்பை கடந்த டிச.31-ம் தேதி அறிவிப்பதாகவும் ரஜினிகாந்த் கூறியிருந்தார். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதை வரவேற்ற மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், தன்னுடன் ரஜினிகாந்த் இணைந்து செயல்பட விரும்பினால் செயல்படுவேன் என்று தெரிவித்தார். அதை ஏற்பது போலவே ரஜினிகாந்தும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனிடையே "அண்ணாத்த" படப்பிடிப்புக்கு ஹைதராபாத் சென்ற ரஜினிகாந்துக்கு கரோனா தொற்றுஏற்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்தார். தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரப் போவதில்லை என்று ட்விட்டரில் பதிவிட்டார். அதைத்தொடர்ந்து விரிவான அறிக்கையும் வெளியிட்டார்.

இதனால் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். மன்ற நிர்வாகிகள் பலர் திமுகவிலும், அதிமுகவிலும் இணைந்தனர். வரும் தேர்தலில் அவருக்குப் பிடித்த கட்சிக்கு ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுப்பார் என்றும், அவ்வாறு எந்தவித ஆதரவும் யாருக்கும் தரமாட்டார் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்த நிலையில், அவரை சந்தித்து ஆதரவு கேட்கப்போவதாக கமல்ஹாசன் கூறியிருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். இது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கமல்ஹாசன் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், “பதவிக்கு ஆசைப்பட்டவர்கள்தான் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகி, திமுக, அதிமுகவில் சேர்ந்துள்ளனர். சினிமாவில் இரு துருவங்களாக ரஜினியும்,கமலும் இருந்தனர். ஆனால், மக்கள் நன்மைக்காக அரசியலில் சேர்ந்து பணியாற்றவும் தயாராகவே இருந்தனர். துரதிர்ஷ்டவசமாக ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை. இருப்பினும் ரஜினி ரசிகர்கள் மக்கள் நன்மைக்காக கமல்ஹாசனுடன் இணைந்து பயணிக்க விரும்பிய நிலையில், அவர்கள் வரும் தேர்தலில் நிச்சயமாக கமல்ஹாசனை ஆதரிப்பார்கள்” என்ற உறுதிபடக் கூறினார்.

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மன்றத்தினரும், நிர்வாகிகளும் தங்களுக்கு விருப்பப்பட்ட கட்சியில் இணைந்து கொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கும் பொருந்தும் என்பதால் அவர்கள் கமல்ஹாசனை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளனர் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள். இதுதொடர்பாக ரஜினி ரசிகர்கள் யாரும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்க மறுக்கின்றனர். ரஜினி ரசிகர்களின் வாக்குகள் கமல்ஹாசனுக்கு கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x