Last Updated : 26 Feb, 2021 03:14 AM

 

Published : 26 Feb 2021 03:14 AM
Last Updated : 26 Feb 2021 03:14 AM

காங்கிரஸுக்கு 20 தொகுதிகள் மட்டுமே: மேலிடத் தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்த திமுக

திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்க கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் வந்தனர்.படம்: கஸ்ரீபரத்

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 20 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று பேச்சுவார்த்தையில் திமுக கூறியதால் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுகதலைமையில் உருவான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர்கிறது. திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய 10 கட்சிகள் கூட்டணியில் உள்ளன.

மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் தொகுதிப் பங்கீடுகுறித்து காங்கிரஸுடன் முதல் கட்டமாக திமுக நேற்று பேச்சு நடத்தியது. இதற்காக நேற்று முன்தினம் சென்னை வந்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர், திமுகவிடம் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் கேட்பது என்பது குறித்து முன்னாள் மாநிலத் தலைவர்கள், முன்னாள் மத்தியஅமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ.க்கள், மாநில செயல் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து நேற்று காலை 10.15 மணிக்கு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக – காங்கிரஸ் இடையே முதல்கட்ட பேச்சு தொடங்கியது. 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் பேச்சில்திமுக தரப்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிரணிச் செயலாளர் கனிமொழி, காங்கிரஸ் தரப்பில் உம்மன் சாண்டி,தினேஷ் குண்டுராவ், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு, மு.க.ஸ்டாலினின் பிரச்சாரம், அதிமுக – பாஜக கூட்டணி நிலவரம், பிரதமர் மோடி வருகை, புதுச்சேரி அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்று நடப்பு அரசியல் சூழல் குறித்து இருதரப்பும் பேசியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, கடந்த 2016 பேரவைத் தேர்தலில் ஒதுக்கிய 41 தொகுதிகள் வேண்டும் என்பதில் சோனியாவும், ராகுல் காந்தியும் உறுதியாக இருப்பதாகக் கூறி பட்டியல் ஒன்றை உம்மன் சாண்டி அளித்துள்ளார். அதில் கடந்த 2016-ல்காங்கிரஸ் வென்ற 8 தொகுதிகள் உட்பட 50 தொகுதிகளின் பெயர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதற்குப் பதிலளித்த துரைமுருகன், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்து வந்துள்ளோம். கூட்டணியில் 10 கட்சிகள் உள்ளன.எனவே, 2016 ஒதுக்கீட்டை இப்போது நடைமுறைப்படுத்த முடியாது. எனவே, 15 தொகுதிகளை காங்கிரஸ் ஏற்க வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள், இதனை சோனியாவும், ராகுலும் கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள். காங்கிரஸை மிகவும் குறைத்து மதிப்பிடுகிறீர்களே? என்று காங்கிரஸ் தரப்பில் பதிலளித்துள்ளனர். காங்கிரஸுக்கு 18 முதல் 20 தொகுதிகள் வரை ஒதுக்கலாம். ஸ்டாலினிடம் பேசிய பிறகுஅடுத்து பேசலாம் என்று திமுக தலைவர்கள் கூறியுள்ளனர். காங்கிரஸ் தரப்பிலும் சோனியா, ராகுலிடம் பேசிவிட்டு வருகிறோம் என்று கூறி விடைபெற்றதாக காங்கிரஸ், திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

50 நிமிடங்கள் நடந்த பேச்சு முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “திமுகவுடன் கூட்டணி குறித்து நல்ல முறையில், மகிழ்ச்சிகரமாகப் பேசினோம். மேலும் அவரவர் கட்சி நிர்வாகிகளுடன் பேசி அடுத்தகட்ட நகர்வுக்குச் செல்வோம்" என்றார்.

அண்ணா அறிவாலயத்தில் இருந்து திரும்பிய உம்மன் சாண்டி உள்ளிட்டோர், காங்கிரஸ் தலைவர்களுடன் 1 மணி நேரம் ஆலோசனை நடத்திய பிறகு டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

காங்கிரஸ் கடும் அதிருப்தி

கடந்த காலங்களில் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் வரும்போது அவர்களிடம், கருணாநிதியே நேரில் பேசுவார். 2011, 2016 பேரவைத் தேர்தல்களில் குலாம்நபி ஆசாத் தலைமையிலான குழுவினர்தான் கருணாநிதியுடன் பேச்சு நடத்தினர். ஆனால், நேற்று கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி போன்ற முக்கியத் தலைவர்கள் வந்தபோதும், அவர்களிடம் ஸ்டாலின் நேரில் பேசவில்லை. அதுமட்டுமல்ல, அவர்களை மரியாதை நிமித்தமாகக் கூட ஸ்டாலின் சந்திக்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x