Last Updated : 26 Feb, 2021 03:14 AM

 

Published : 26 Feb 2021 03:14 AM
Last Updated : 26 Feb 2021 03:14 AM

வெற்றிவேல்.... வீரவேல்... முழக்கம்: கோவை பிரச்சாரத்தில் மோடி உற்சாகம்!

கோவையில் நேற்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பரிசாக வேல் வழங்கிய மாநிலத் தலைவர் எல்.முருகன். அருகில், மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி, முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன், விவசாய அணித் தலைவர் நாகராஜ், மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்டோர். படங்கள்: ஜெ.மனோகரன்

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டம் என்ற யுடியூப் சேனலின் பின்னணியில் திமுகஇருப்பதாகவும், அதை அம்பலப்படுத்தும் நோக்கிலும் வெற்றிவேல் யாத்திரையை பாஜக தொடங்கியது.

பாஜக மாநிலத் தலைவர் எல்முருகன்கடந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதிதிருத்தணியில் ‘வெற்றிவேல் யாத்திரை’யைத் தொடங்கினார். தமிழகத்தில் வேல்யாத்திரை நடத்த அரசு அனுமதி மறுத்தது. இருப்பினும், தடையை மீறி எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடைபெற்றது. வேல் யாத்திரை நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். யாத்திரை நிறைவு விழா கடந்த டிசம்பர் 7-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவுபெற்றது.

இந்நிலையில், கோவையில் நேற்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, “வணக்கம் தமிழ்நாடு... வணக்கம் கோயம்புத்தூர்... வெற்றிவேல்... வீரவேல்...” என்று கூறி, பேச்சைத் தொடங்கினார். வெற்றிவேல்...வீரவேல்...என பிரதமர் மோடி மிகுந்த உற்சாகத்துடன் கூறியபோது, கூட்டத்தில் பங்கேற்றோர் கரகோஷம் எழுப்பினர்.

கூட்டம் நடைபெற்ற கொடிசியா மைதானத்தில் தலைவர்களின் பெரிய அளவிலான ‘கட் அவுட்’கள் வைக்கப்பட்டிருந்தன. அதில், முதல் கட்அவுட்டாக மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் கட்அவுட் இடம்பெற்றிருந்தது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது. அதைத் தொடர்ந்து, எம்ஜிஆர், பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோரின் கட் அவுட்-கள் இடம் பெற்றிருந்தன.

பிரதமர் காலில் விழ முற்பட்ட அதிமுக எம்.பி.

டி.ஜி.ரகுபதி

மத்திய, மாநில அரசுகள் சார்பில் புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா கோவை கொடிசியா தொழிற்காட்சி அரங்கில் நேற்று நடைபெற்றது. அங்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அப்போது, பிரதமரை வரவேற்க நின்று கொண்டிருந்த, தேனி எம்.பி.யும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத், பிரதமரின் காலில் விழ முற்பட்டார். அவரைத் தடுத்து நிறுத்திய பிரதமர், காலில் விழக்கூடாது என புன்னகையுடன் அறிவுறுத்தினார்.

இதேபோல, மற்றொரு அதிமுக எம்.பி.யும் பிரதமர் காலில் விழ முற்பட்டபோது, தடுத்து நிறுத்தினர். மேலும், பாஜக மாவட்ட நிர்வாகி கணேஷ்குமார், செருப்பை கழற்றிவிட்டு, பிரதமருக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது, செருப்பை கழற்றக் கூடாது என பிரதமர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, மேடைக்குச் சென்ற பிரதமர், அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x