Last Updated : 25 Feb, 2021 03:14 AM

 

Published : 25 Feb 2021 03:14 AM
Last Updated : 25 Feb 2021 03:14 AM

கூட்டணி அறிவிக்கப்பட்ட பிறகும் தனியாக பிரச்சாரம் செய்யும் பாஜக: மோடி, அமித் ஷா கூட்டங்களில் கூட்டணி தலைவர்கள் பங்கேற்கவில்லை?

அதிமுகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட பிறகும் தமிழகத்தில் பாஜக தனியாக பிரச்சாரம் செய்து வருகிறது. கோவையில் இன்று பிரதமர் நரேந்திரமோடிபங்கேற்கும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்திலும், வரும் 28-ம் தேதி விழுப்புரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டத்திலும் அதிமுக உட்பட கூட்டணி கட்சியினர் யாரும் பங்கேற்க வாய்ப்பில்லை என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாமக – பாஜக – தேமுதிக – தமாகா - புதிய தமிழகம் - புதிய நீதிக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. புதுச்சேரிஉள்ளிட்ட 40 தொகுதிகளில் தேனி தவிர மற்ற39 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்விஅடைந்தது. அதேநேரத்தில் மக்களவைத் தேர்தலோடு 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 9-ல் வென்று ஆட்சியை அதிமுக தக்க வைத்துக் கொண்டது.

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு தமிழகத்தில் ஏற்பட்ட மோடி எதிர்ப்பலையே காரணம் என்று அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் வெளிப்படையாகப் பேசத்தொடங்கினர். இதனால் அதிமுக – பாஜக இடையே கூட்டணியில் இணக்கமற்ற சூழல்ஏற்பட்டது.

ஆனாலும், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என்று முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அறிவித்தனர். ஆனாலும், தொகுதிப் பங்கீடு குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. கடந்த 2 மாதங்களாக முதல்வர் பழனிசாமி தமிழகம் முழுவதும் தனியாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதுபோல கூட்டணி அறிவிக்கப்பட்ட பிறகும் பாஜக தனியாக பிரச்சாரம் செய்து வருகிறது. கடந்த 21-ம் தேதி சேலத்தில் பாஜக இளைஞரணி மாநாட்டில் பாஜக முன்னாள் தேசியத் தலைவரும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இதில் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கவில்லை.

அதுபோல கோவையில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கவில்லை. வரும் 28-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரை பங்கேற்கச் செய்ய பாஜக முயற்சித்து வருவதாகக் கூறப்பட்டது.

ஆனால், தொகுதிப் பங்கீடு குறித்து ஆரம்ப கட்ட பேச்சு கூட நடைபெறாத நிலையில் பாஜக ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்தில் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தல் தேதி வெளியான பிறகு, தொகுதிப் பங்கீடு முடிந்ததும் கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலேயே கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பாஜக முக்கியத் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா இடம்பெறுவது உறுதி. அதனால்தான் கடந்த 14-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் பாமக, தேமுதிக, தமாகா நிர்வாகிகள் பங்கேற்றனர். தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்படாததால் கூட்டணி அறிவிப்பு தாமதமாகிறது. விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரையும் பங்கேற்கச் செய்ய முயற்சித்து வருகிறோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x