Last Updated : 25 Feb, 2021 03:14 AM

 

Published : 25 Feb 2021 03:14 AM
Last Updated : 25 Feb 2021 03:14 AM

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடியும் முன் நெல்லையில் துண்டுபோட்டு இடம்பிடித்தது பாஜக: தேர்தல் அலுவலகம் திறப்பு, சுவர் விளம்பரங்கள் அமர்க்களம்

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், அக்கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து இன்னும் தெரியாத நிலையில், `திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதி தங்களுக்குத்தான்’ என்று, முன்கூட்டியே துண்டைப்போட்டு பாஜக இடம்பிடித்திருப்பது அதிமுகவினருக்கே அதிர்ச்சி அளித்திருக்கிறது.

தமிழகத்தில் திருநெல்வேலி தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் திறந்து வைத்திருக்கிறார். பூத் பொறுப்பாளர்கள் சந்திப்பு, இருசக்கர வாகன பேரணிஎன்று அக்கட்சி தேர்தல் பணிகளில் முன்கூட்டியே சுறுசுறுப்புகாட்டியிருக்கிறது. இத்தொகுதியில் பாஜக மாநில துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று சுவர் விளம்பரங்கள், விளம்பர பதாகைகள் வைத்தும். சுவரொட்டிகளையும் ஒட்டி வருகின்றனர்.

இத்தொகுதியில் கடந்த 2001, 2006-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றிருந்தார். கடந்த தேர்தலில் 601 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணனிடம் இவர் தோல்வியை தழுவியிருந்தார். மீண்டும் அவரை அதிமுக கூட்டணி பலத்துடன் பாஜக களமிறக்க அனைத்து பணிகளையும் தொடங்கியிருக்கிறது.

வழக்கமாக தேர்தல் அலுவலகம் அமைக்கும் இடத்தில்தான் இப்போதும் தேர்தல் அலுவலகத்தை நயினார் நாகேந்திரன் திறந்திருக்கிறார்.

கடந்த சில வாரங்களுக்குமுன் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் நயினார்நாகேந்திரன் பேசும்போது, தமிழகத்தில் பாஜக வெற்றிபெறும் முதல் தொகுதியாக திருநெல்வேலி இருக்கும் என்று தெரிவித்திருந்தார். கடந்த பொங்கல் பண்டிகையின்போது வாக்காளர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து, தாமரை சின்னத்துடன் சுவரொட்டிகளை தொகுதி முழுக்க ஒட்டியிருந்தார்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான இடங்கள் குறித்து தெளிவான முடிவுகள் எடுக்கப்படாத நிலையில் திருநெல்வேலி தொகுதியில் தேர்தல் பணிகளை பாஜக முன்கூட்டியே தொடங்கியிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இத் தொகுதியில் போட்டியிட அதிமுக மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் காய்களை நகர்த்தி வருகிறார்கள். பாஜகவின் செயல்பாடுகள் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பாஜக நிர்வாகிகளிடம் கேட்டபோது, `தமிழகத்தில் பாஜகவுக்கு பிரகாசமான வாய்ப்புள்ள முதல் 10 தொகுதிகளில் திருநெல்வேலியும் உள்ளது. இத்தொகுதிக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் வேட்பாளராக கிடைத்துள்ளதால் அவரை களமிறக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கியிருக்கிறோம்.

இத்தொகுதி நிச்சயம் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் தேர்தல் காரியாலயத்தையும் திறந்திருக்கிறோம். மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று தாமரைக்கு வாக்களிக்குமாறு தொண்டர்கள் ஏற்கெனவே களப்பணிகளையும் தொடங்கிவிட்டனர்’ என்று தெரிவித்தனர்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது திருநெல்வேலி தொகுதியைநயினார் நாகேந்திரன் கேட்டிருந்தார். ஆனால் இத்தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் ராமநாதபுரம் தொகுதியில் அவர் போட்டியிட்டார். வரும் தேர்தலில் அதிமுக- பாஜக தொகுதி பங்கீட்டில் திருநெல்வேலி பாஜக வசம் வருமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x