Last Updated : 23 Feb, 2021 03:15 AM

 

Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

கூட்டணி கட்சிகளுக்கு 3 அல்லது 4 தொகுதிகள் மட்டுமே; சென்னை மாநகர், புறநகரின் அதிக தொகுதிகளில் திமுக போட்டி

சென்னை மாநகர், புறநகரில் அதிக தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை அடையாளம் காண்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் 10 கட்சிகள் இருக்கும் நிலையில் தொகுதிப் பங்கீடு பேச்சு இன்னும் தொடங்கவில்லை. தமிழகம் முழுவதும் குறைந்தது 170 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ள திமுக, தங்களுக்கான சாதகமான தொகுதிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கடந்த 2006 வரை சென்னை மாநகரம் திமுகவின் கோட்டையாக இருந்தது. 2006 பேரவைத் தேர்தலில் தியாகராய நகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பூங்கா நகர், ஆர்.கே.நகர், கும்மிடிப்பூண்டி என தொடர்ந்து வென்ற தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. சேப்பாக்கத்தில் போட்டியிட்ட கருணாநிதி 8,526, ஆயிரம்விளக்கு போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் 2,468 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றனர். இதன் மூலம் சென்னை திமுக கோட்டை என்பது தகர்ந்தது.

2011 பேரவைத் தேர்தலில் கொளத்தூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக தோற்றது. ஆனால், கடந்த 2016 பேரவைத் தேர்தலில் சென்னை மாநகர், புறநகரில், ஆர்.கே.நகர், ராயபுரம், மயிலாப்பூர், தியாகராய நகர், விருகம்பாக்கம், பெரம்பூர், மதுரவாயல், அம்பத்தூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி தவிர மற்ற தொகுதிகளில் வென்று இழந்த பெருமையை திமுக மீட்டெடுத்தது.

வரும் பேரவைத் தேர்தலில் சென்னை மாநகர், புறநகரில் உள்ள தொகுதிகளில் பெரும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திமுக இருப்பதாகவும், பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நடத்திய ஆய்விலும் சென்னை திமுகவுக்கு கை கொடுக்கும் என்று தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2016-ல் சென்னையில் திமுக பெரும் வெற்றி பெற்றாலும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட ராயபுரம், மயிலாப்பூர், மதுரவாயல், அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 5 தொகுதிகளில் தோல்வி அடைந்தது. எனவே, இந்தத் தேர்தலில் அப்படி நடத்து விடக்கூடாது என்பதற்காக சென்னை மாநகர், புறநகரில் 90 சதவீத தொகுதிகளில் திமுக போட்டியிட முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னையில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு 4 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

வரும் பேரவைத் தேர்தலில் சென்னை மாநகர், புறநகரில் உள்ள தொகுதிகளில் பெரும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திமுக இருப்பதாகவும், பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நடத்திய ஆய்விலும் சென்னை திமுகவுக்கு கை கொடுக்கும் என்று தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x