Last Updated : 22 Feb, 2021 03:17 AM

 

Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

‘‘தமிழக அரசியலில் பாஜக இம்முறை அழுத்தமாக தடத்தை பதிக்கும்!’’- நடிகர் ராதாரவி சிறப்புப் பேட்டி

கடந்த ஓராண்டுக்கு முன்பு பாஜகவில் இணைந்த நடிகர் ராதாரவி, அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்திருந்தபோது அவரை நேரில் சந்தித்தார். தற்போதைய அரசியல் செயல்பாடுகள் குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியிலிருந்து...

கடந்த வாரத்தில் சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது என்ன பேசினீர்கள்?

பிரதமர், சென்னையில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்துவிட்டு கேரளாவுக்கு செல்லத் தயாரான போது விமான நிலையத்தில் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. ‘இவர்தான் நடிகர் ராதாரவி!’ என அவரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தபோது, மகிழ்ச்சியோடு வரவேற்றார். ‘‘இப்போ எனக்கு 68 வயதாகிறது. 67 வயது வரைக்கும் ஒரு ரவுடி மனநிலையில் இருந்தவன், நான். கடந்த ஓராண்டு காலமாக அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு அமைதியாக இருக்கிறேன். உங்களுடைய வெற்றிக்கு இங்கே தொடர்ந்து உழைப்பேன்!’’ என்றேன். அவரோ, ‘‘வெரி குட்.. வெரி குட்!’’ என ஆங்கிலத்தில் பதில் கூறிவிட்டு, சந்தோஷம் பொங்க தோல்பட்டையை இறுக்கமாக பற்றிக்கொண்டார். இந்தியாவை காப்பற்றும் திறன் கொண்டவராகவே மோடியை பார்க்கிறேன். காஷ்மீர் பிரச்சினையை சரி செய்தது; லடாக் பகுதியை அழகுப்படுத்தியது என இந்த ஒன்றிரெண்டு விஷயங்களே அதற்கு சரியான சான்று!

உங்கள் தந்தை எம்.ஆர்.ராதா ஒரு பகுத்தறிவாளர். ஆனால், நீங்களோ அதுக்கு முரணாக பாஜவில் இணைந்துள்ளீர்கள் என்று விமர்சிக்கப்படுகிறதே?

அப்பா சாமி கும்பிடமாட்டார் என்பது உண்மைதான். அதுக்காக யாரையும் அவர் பக்கம் கையைப்பிடித்து இழுத்ததில்லை. என் இஷ்டப்படி சுதந்திரமாகவே சிந்திக்க விட்டவர். நான் 11 வருஷம் கிறிஸ்துவ ஆசிரமப் பள்ளியில் படித்தேன். கல்லூரி வாழ்க்கை சென்னை நியூ கல்லூரியில் கழிந்தது. அது இஸ்லாம் நிர்வாகத்தில் செயல்படும் இடம். 1970-ல் இருந்து 37 வருஷம் சபரிமலைக்கு விரதம் இருந்து சென்றிருக்கிறேன். இப்படி எல்லா திசைகளிலும் பயணித்தவன்தான், நான். எனக்குத் தெரியும் எதை எப்போது கையில் எடுக்க வேண்டும் என்பது. விமர்சனம் செய்பவர்கள் பற்றி நான் துளியும் கவலைப்படவில்லை. இந்தியாவை காப்பாற்றும் கட்சியாக பிஜேபியை பார்க்கிறேன். அதனால் அவர்களோடு பயணிக்கிறேன்.

கட்சியில் உங்களது ரோல்?

பிரச்சாரம்தான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன். எனக்கு பதவி ஆசை எல்லாம் இல்லை. சுயமரியாதை என்பது திராவிட கட்சிகளுக்கு மட்டுமே உண்டு என தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது மிருகத்துக்கும் உண்டு. கட்சியில் சேர்ந்ததும் பொறுப்பு வேண்டும் என கேட்கும் தவறான செயலில் நான் ஈடுபட மாட்டேன். என்னை அழைத்து போட்டியிட சொன்னாலும், ‘என்னைவிட உழைப்பவர்கள் இன்னும் நிறைய பேர் உள்ளனர். அவர்களுக்கு கொடுங்கள்?’ என வழிவிட்டுவிட்டு அன்போடு ஒதுங்கிவிடுவேன்.

திமுக, அதிமுக, பாஜக என தொடர்ந்து கட்சி மாறிக்கொண்டே இருக்கிறீர்கள் என ஒரு குற்றச்சாட்டும் உள்ளதே?

நான் பாஜக-வில் இணைந்ததை விமர்சிப்பவர்களும், பணம் வாங்கிக்கொண்டு கட்சியில் இணைந்தேன் என திட்டுபவர்களும் சரித்திரம் படிக்காதவர்கள். திசை தெரியாத மூடர்கள் கூட்டமாகவே அவர்களைப் பார்க்கிறேன். இந்தமாதிரி விமர்சனங்களுக்கு செவி சாய்க்கக்கூடாது. இது என் தனிப்பட்ட முடிவு. ஒரு கட்சியை அப்படியே இழுத்துக்கொண்டு போய் மாறி மாறி நிற்கவில்லை. இந்தக் கேள்வியை அண்ணன் வைகோவிடம் கேட்க வேண்டும்? அவர்தான், ‘ஸ்டாலினை தூக்கில் போட வேண்டும்!’ என ஒரு காலத்தில் கூறினார். இன்றைக்கோ, ‘முதல்வர் ஆக்காமல் விடமாட்டேன்!’என கூறி வருகிறார். ஆகவே, தனிப்பட்ட முறையில் ஒரு முடிவை எடுத்து பாஜக-வில் இணைந்திருக்கும் ராதாரவியை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த விமர்சனங்களை எல்லாம் யார் பரப்பி வருகிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

அப்படியென்றால் திமுகவினர்தான் உங்களை விமர்சிக்கிறார்கள் என கருதுகிறீர்களா?

சமூக வலைதளம் உள்ளிட்ட இடங்களில் என்னை விமர்சிப்பவர்களில் திமுகவினரும் இருக்க வாய்ப்புண்டு. அத்தனை திமுக-வினருக்கும் இந்த நேரத்தில் ஒன்று சொல்ல நினைக்கிறேன். நீங்கள், ‘‘கலைஞர்... கலைஞர்’’ என்று மூச்சுக்கு மூச்சு அழைக்கிறீர்களே? அந்த பட்டத்தை கருணாநிதிக்கு அளித்தது என் தந்தை எம்.ஆர்.ராதா என்பதை மறந்துவிட வேண்டாம்!

திராவிட கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகளில் முன்பு திறம்பட்ட பேச்சாளர்கள் இருப்பார்கள். இப்போது அதெல்லாம் குறைந்துவிட்டது என்பது உண்மைதானே?

செல்போன் வந்ததில் இருந்து பேச்சாளர்களும் குறைந்துவிட்டனர். தலைமைக்கழக பேச்சாளர்கள் என்கிற ஒரு குழு உண்டு. இப்போது திமுகவில் சில பேர் உள்ளனர். அவர்களையும் பேச விடாமல், அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலினும், அவரது மகனுமே ஊர் ஊராக கூட்டம் போட்டு பேசி வருகின்றனர். ஒரு காலத்தில் 30 நாட்களில் 40 கூட்டங்களில் பேசியிருக்கிறேன். உழைக்காமல் இந்த இடத்துக்கு வரவில்லை. இப்போதெல்லாம் ஒப்பந்தம் (கான்ட்ராக்ட்) போட்டு கட்சியை வளர்க்கின்றனர். அவர்கள் சொல்படித்தான் நடக்க வேண்டியுள்ளது. அதனால் பேச்சாளர்கள் குறைந்து வருகின்றனர். திமுகவில் ஆ.ராசா மாதிரியான நல்ல பேச்சாளர்கள் சிலர் உள்ளனர். அவர்களும் புள்ளி விவர பேச்சாளர்களாக மாறியதுதான் வேடிக்கை.

தமிழகத்தில் உள்ள திரைத்துறையினரை கட்சிக்குள் இழுக்க பாஜக குறி வைக்கிறதா?

எல்லோரும் விரும்பித்தான் ஒரு கட்சியில் சேர்வார்கள். திரையுலகினர் சேர்வது விரைவில் செய்தியாகிறது. நடிகைகள் கவுதமி, குஷ்பு தொடங்கி ராம்குமார், நான் வரைக்கும் விரும்பியே பிஜேபியில் இணைந்துள்ளோம். அதிமுகவுடன் கூட்டணி என்கிற நிலை இருந்தாலும் இந்தத் தேர்தலில் பிஜேபி அழுத்தமாக தனது கால்தடத்தை பதிக்கும் என்பதுதான் உண்மை.

உங்கள் சகோதரி ராதிகா முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்திருக்கிறாரே?

எனக்கு அதைப்பற்றி முழுமையாக தெரியவில்லை. அது அவருடைய தனிப்பட்ட முடிவு. நடிப்பில் சுயம்புவாக உழைத்து முன்னேறியவர். அவரது முடிவில் நாங்கள் யாரும் குறுக்கே நிற்க முடியாது. அரசியலுக்காக நடிப்புத் தொழிலை விட்டுவிடப்போகிறேன் என்று அவர் கூறியதாக ஒரு செய்தி கேள்விப்பட்டேன். அதுதான் என்னால் ஏற்க முடியவில்லை. ஒரு சிறந்த நடிகையை நான் இழக்கத் தயாராக இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x