Published : 21 Feb 2021 07:06 AM
Last Updated : 21 Feb 2021 07:06 AM

ஏழைத் தாயின் புதல்வர்களுக்கோ, விவசாயி மகன்களுக்கோ அக்கறை கொஞ்சமும் இல்லை- கமல்ஹாசனின் மனம் திறந்த மடல்

மாண்புமிகுந்தவர்களுக்கும், மிகவேண்டியவர்களுக்கும், என் வணக்கங்கள்...

ஓர் உச்ச நட்சத்திரமாக அல்லாது, ஒரு கட்சியின் தலைவராக அல்லாது ஒரு சாதாரண இந்தியப் பிரஜையின் இடத்தில் என்னை இருத்திக்கொண்டு எழுதும் மடல்.

ஏற்கெனவே இந்தியா பொருளாதார நசிவில் இருந்தது. வேலைவாய்ப்பின்மையும் வறுமையும் தலைவிரித்தாடியது. சாமானியர்கள் மீது இடியென இறங்கியது கரோனா பெருந்தொற்றுக் கால லாக்டவுன். பாதி இந்தியா பட்டினி கிடந்தது. மீதி இந்தியா ரோட்டில் நடந்தது. சிறு, குறு தொழில் செய்து வந்தவர்களும், சிறிய சம்பளம் வரும் வேலைகளில் இருந்த ஏழை எளிய மக்களும், கீழ் நடுத்தர மக்களும் வாழ்வாதாரங்களுக்கு மிகவும் சிரமப்பட்டார்கள். படுகிறார்கள்.

பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்பது போல கரோனா எனும் கொடுந்தொற்று இன்னமும் விலகியிருக்காத சூழலில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம் இவர்களது தலை மீது விழுந்திருக்கிறது.

எரிபொருள் விலையேற்றத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உடனடியாக ஏறுகிறது. குடும்பங்களின் போக்குவரத்துச் செலவும் அன்றாட செலவும் பெருமளவில் அதிகரிக்கிறது. ஆனால் நம் ஏழைத் தாயின் புதல்வர்களுக்கோ, விவசாயி மகன்களுக்கோ இதைப் பற்றிய அக்கறை கொஞ்சமும் இல்லை. நெய்யில் மிதக்கும் அப்பத்துக்கு எண்ணெயில் கொதிக்கும் வடையின் வருத்தம் தெரியவா போகிறது?

இந்த விலையேற்றத்துக்கான காரண காரியங்கள், தர்க்கங்கள் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டற்ற நுகர்வு, மாற்று எரிசக்திகளை உருவாக்காமல் இருந்தது, இறக்குமதியையே அதிகம் நம்பி இருந்தது என பாக்கெட்டிலேயே பல பதில்களை இவர்கள் வைத்திருக்கலாம். இவர்களை நாம் தேர்ந்தது சிறந்த பதில்களைக் கேட்பதற்காக அல்ல. தீர்வுகளுக்காக!

பசித்த வயிறுகளை வைத்துக்கொண்டு வளர்ச்சியைப் பற்றிப் பேசுவதே அபத்தமானது. பொருளியல் முன்னேற்றம் என இவர்கள் முன்வைக்கும் போலிப் பெருமிதம் ஆபாசமானது. நாட்டின் சகல தொழில்களுக்கும் எரிசக்தி ஆதாரமாக இருக்கையில் அரசியலாளர்களின் முதன்மைக் கவனம் அதன் விலையைக் கட்டுப்படுத்துவதில்தான் இருந்திருக்க வேண்டும்.

பழி வாங்கவும், பழி போடவும் செலவழிக்கும் ஆற்றலில் கால் பங்கை வழி தேடுவதில் செலவழித்திருந்தால் இப்படிச் சீரழியும் நிலைமைக்கு தேசம் ஆட்பட்டிருக்காது. இந்த விலையேற்றங்களால் பெருமளவு நடுத்தர மக்கள் ஏழைகளாகிவிட்டார்கள். ஏழைகள் பரம ஏழைகளாகிவிட்டார்கள். வறுமைக்கோடு தடிமனாகிக்கொண்டே செல்கிறது. உடனடியாக மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளும் கலந்து பேசி எரிபொருட்களின் மீதான வரிகளை எவ்வளவு குறைக்க முடியும் என ஒரு முடிவெடுங்கள். பாவப்பட்ட ஜனங்களின் முதுகில் ஏறியிருக்கும் இந்தத் தாள முடியாத சுமையைக் குறையுங்கள்.

நாடே கொதித்தெழும் முன் நல்லதைச் செய்யுங்களய்யா.

தங்கள்,
கமல் ஹாசன்,
இந்தியக் குடிமகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x