Published : 20 Feb 2021 03:16 AM
Last Updated : 20 Feb 2021 03:16 AM

ஸ்ரீரங்கம் அல்லது துறைமுகம் தொகுதியில் போட்டியிட எல்.முருகன் திட்டம்

ஸ்ரீரங்கம் அல்லது சென்னைதுறைமுகம் தொகுதியில் போட்டியிட தமிழக பாஜகதலைவர் எல்.முருகன் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சு, தலைவர்களின் பிரச்சாரம் என்று சட்டப்பேரவைத் தேர்தல்பணிகள் ஒருபக்கம் நடைபெற்றாலும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. முதல்வர் பழனிசாமி - எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - சென்னை கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

மற்ற கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்கான தொகுதிகளை தேர்வுசெய்ய தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்தான் போட்டியிடும் தொகுதியை தேர்வு செய்வது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு்ள்ளார். கடந்த 2011-ல் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன், 2012-ல் நடைபெற்ற சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பிறகு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவரானதால் தேர்தலில் போட்டியிடவில்லை.

தற்போது தமிழக பாஜக தலைவராக, தனக்கான தொகுதியை தேர்வு செய்யும் இடத்தில் இருப்பதால் அதுகுறித்து கட்சியினருடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். ராசிபுரத்தில் பாஜகவுக்கு எந்த அடித்தளமும் இல்லை. திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி, ராசிபுரத்தில் போட்டியிட விரும்புகிறார். எனவே, அந்த யோசனையை எல்.முருகன் கைவிட்டார். கொங்குமண்டலத்தில் உள்ள தனித் தொகுதிகளான அவினாசி, கூடலூர், பொதுத் தொகுதியான நாமக்கல் ஆகிய தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடலாமா என்றும் முருகன் ஆலோசித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் தொகுதி என்பதால் அவினாசியிலும், திமுக தொடர்ந்து வென்ற தொகுதி என்பதால் கூடலூரிலும் போட்டியிட முடியாத நிலை முருகனுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தனித் தொகுதியில் போட்டியிடும் முடிவை கைவிட்டு பொதுத் தொகுதியில் போட்டியிடலாமா என்று அவர் ஆலோசித்து வருவதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பாஜக தேசியப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் ஆகியோரிடம் அவர் விவாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுமாறு திருச்சியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இத்தொகுதில் முத்தரையர், பிராமணர்கள், எஸ்.சி. வாக்காளர்கள் அதிகம். மாநிலத் தலைவரே போட்டியிடுவதால் பிராமணர்கள், எஸ்.சி. வாக்குகளைப் பெற்று விடலாம் என்று கூறியுள்ளனர். இதனை மனதில்கொண்டுதான் முத்தரையர் சங்கமாநாட்டில் முருகன் பங்கேற்றதாகத் தெரிகிறது.

அதுபோல சென்னையில் வட இந்தியர்களும், முஸ்லிம்களும் அதிகம் உள்ள துறைமுகம் தொகுதியில் போட்டியிடலாம் என்று முருகனுக்கு பாஜகவினர் ஆலோசனை கூறியுள்ளனர். வாக்குச் சாவடி அளவில் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதி என்பதால் இத்தொகுதியையும் முருகன் பரிசீலித்து வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x