Published : 20 Feb 2021 03:16 AM
Last Updated : 20 Feb 2021 03:16 AM

திமுகவும் காங்கிரஸும் மக்களுக்கு எதிரிகள்: பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கருத்து

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கலந்துகொண்டு பேசினார்.

தஞ்சாவூர்

தமிழக மக்களுக்கு பாஜக நண்பனாகவும், காங்கிரஸ்- திமுக ஆகியவை எதிரிகளாகவும் உள்ளன என்று பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதி பாஜக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சிகளுக்காக ரூ.6 லட்சம் கோடியை பிரதமர் மோடி அளித்துள்ளார். முத்ரா கடன், விவசாயிகளுக்கான கிசான் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்துள்ளனர்.

தமிழகத்தின் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டை மிருகவதை எனக்கூறி வழக்கு தொடுத்தது காங்கிரஸும், திமுகவும்தான். ஆனால், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும், ஜல்லிக்கட்டு கலாச்சாரம், பண்பாடு நிறைந்தது என மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடைபெற உறுதுணையாக இருந்தார். எனவே, தமிழக மக்களுக்கு பாஜகதான் நண்பன். காங்கிரஸும், திமுகவும் எதிரிகள்.

திராவிடம் எனக் கூறி தமிழக மக்களை திமுக ஏமாற்றி வருகிறது. ஸ்டாலின் கூறும் திராவிடம் என்பது, இந்து கடவுள் மற்றும் கந்தசஷ்டி கவசத்தை அவமதிப்பதும் தானா? இந்து கடவுள்களை எதிர்த்தவர்களுக்கு தமிழக மக்கள்பாடம் கற்பிக்க இதுதான் சரியான நேரம். திமுகவின் முக்கிய நோக்கமே குடும்ப வளர்ச்சியும், பணமும்தான்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றிபெற பாஜகதுணை நிற்கும். கூட்டணியில் நாங்கள் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்கள், 87 சதவீதம் வெளிச் சந்தையில் இருந்து இறக்குமதி செய்வதால்தான் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நம் காலில் நாமே நிற்கும் வகையில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, அவற்றின் உற்பத்திக்கு பிரதமர் மோடி திட்டம் வகுத்து வருகிறார்.

சசிகலா, அமமுக குறித்து எனக்கு எதுவும் தெரியாது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, சசிகலாவின் பலம், பலவீனம் குறித்து தெரியும். அது அவர்களின் உட்கட்சி விவகாரம். எனவே, கூட்டணியில் யாரை சேர்த்துக்கொள்வது என்பதை அதிமுகதான் முடிவு செய்யும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x