Last Updated : 20 Feb, 2021 03:16 AM

 

Published : 20 Feb 2021 03:16 AM
Last Updated : 20 Feb 2021 03:16 AM

இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கும் பாஜகதான் இந்துக்களுக்கு எதிரான கட்சி: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா சிறப்புப் பேட்டி

இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கும் பாஜகதான் இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதா? எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவீர்கள்?

கடந்த ஜனவரி 8-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் முறையான பேச்சு தொடங்கும் என்று கூறினார். மனிதநேய மக்கள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்ற எங்களின் விருப்பத்தை திமுகவிடம் தெரிவித்துள்ளோம். தொகுதி பங்கீடு பேச்சு தொடங்காத நிலையில் அதுபற்றி கூறுவது சரியாக இருக்காது. ஆனால், இந்த முறை எங்களுக்கு உரிய இடங்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் குறிப்பாக எஸ்டிபிஐ கட்சி இணைய வாய்ப்புள்ளதா?

திமுக கூட்டணி மிக பலமாக உள்ளது. எஸ்டிபிஐ இணையுமா என்பதை திமுக தலைமைதான் கூற வேண்டும். மதச்சார்பின்மை, சமூக நீதி, மாநில சுயாட்சி, மாநில உரிமைகளுக்கு எதிரான பாஜகவையும், அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுகவையும் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்கேற்ப திமுக முடிவெடுக்கும் என்று நினைக்கிறேன்.

திமுக சிறுபான்மையினர் அணி மாநாட்டுக்கு அசாதுதீன் ஒவைசியை அழைத்தது. அவர் பங்கேற்கவில்லை. இதற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவித்ததுதான் காரணம் என்கிறார்களே?

திமுக மாநாட்டில் ஒவைசி பங்கேற்க நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் திராவிட கட்சிகளுடன் இணைந்து முஸ்லிம்களுக்கான உரிமைகளை முஸ்லிம் கட்சிகள் பெற்றுத் தந்துள்ளன. அதனால் ஒவைசி போன்றவர்களின் தேவை தமிழகத்தில் இல்லை. தமிழகத்தில் அவரது கட்சிக்கு எந்த பலமும் இல்லை. தமிழக அரசியல் சூழல் மற்ற மாநிலங்களில் இருந்து மாறுபட்டது.

தேசிய அளவில் ஒரு முஸ்லிம் கட்சி உருவாக வாய்ப்புள்ளதா?

இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் அரசியல் சூழல், பிரச்சினைகள் வேறுபடுகிறது. தேசிய அளவில் முஸ்லிம் கட்சி உருவானால் இன்று எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடும் என்று நாங்கள் நினைக்கவில்லை. மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக உள்ள, வகுப்புவாதத்துக்கு எந்த நிலையிலும் இடம் கொடுக்காத ஒரு கட்சி தேசிய அளவில் தேவை. எனவே, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸை பலப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி இருக்கும் திமுக கூட்டணியை மதச்சார்பற்ற அணி என்று எப்படி கூற முடியும் என்று பாஜக விமர்சனம் செய்கிறதே?

மனிதநேய மக்கள் கட்சியை முஸ்லிம் கட்சி என்று கூறுவது தவறு. முஸ்லிம்கள் அல்லாதவர்கள் ஏராளமானவர்கள் எங்கள் கட்சியில் உள்ளனர். முஸ்லிம் லீக் கட்சியும், நாங்களும் இந்திய அரசியல் சட்டத்தை மீறி அதற்கு எதிராக எதுவும் செய்வதில்லை. அனைத்து சமூகத்தின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கிறோம். ஆனால், பாஜக மத ரீதியில் மக்களை அணி திரட்டுகிறது. ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக வெறுப்பை விதைக்கிறது. இதனை மக்கள் நன்கறிவார்கள்.

பாஜகவின் வேல் யாத்திரைக்குப் பிறகு ஸ்டாலின், உதயநிதி போன்றவர்கள் கட்சியினர் அளிக்கும் வேலுடன் காட்சி தருகிறார்களே?

அதில் எந்தத் தவறும் இல்லை. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதுதான் திமுகவின் கொள்கை. திமுக கடவுள் மறுப்பு கட்சி அல்ல. பாஜகவைப் போல மத ரீதியாக வேறுபாடு பார்ப்பதுதான் தவறு. திமுக அப்படிப்பட்ட கட்சி அல்ல.

பயிர்க் கடன் தள்ளுபடி, போராட்ட வழக்குகள் தள்ளுபடி இவையெல்லாம் தேர்தலில் அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறதே?

தேர்தல் வருகிறது என்பதற்காக அதுவும் திமுக ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று ஸ்டாலின் சொன்னதையெல்லாம் முதல்வர் அறிவித்து வருகிறார். சமூக நீதி, இட ஒதுக்கீடு, மாநில உரிமைகளுக்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது. இடஒதுக்கீட்டால் அதிகம் பலன்பெறுவது இந்துக்கள்தான். ஆனால், இடஒதுக்கீட்டை உரிமையைப் பறிப்பதன் மூலம் இந்துக்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. பாஜகவை சுமந்து வரும் அதிமுக அணிக்கு எதிராகபெரும் அலை வீசுகிறது. எனவே, முதல்வரின் சலுகை அறிவிப்புகள் அவர்களுக்கு தேர்தலில் எந்தப் பலனையும் தராது. அதிமுக – பாஜக கூட்டணி பெரும் தோல்வியை சந்திக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x