Last Updated : 19 Feb, 2021 03:22 AM

Published : 19 Feb 2021 03:22 AM
Last Updated : 19 Feb 2021 03:22 AM

திமுக, அதிமுக அல்லாத மாற்று அரசியல் உருவாக வேண்டும்: புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சிறப்பு பேட்டி

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக அல்லாத மாற்று அரசியல் உருவாக வேண்டும். ஒரு கட்சி ஆட்சி முறைக்கு பதிலாக கூட்டணி ஆட்சி வர வேண்டும். அதற்கான சிந்தனையைத் தூண்ட விரும்புகிறேன் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த சிறப்புப் பேட்டி:-

தற்போது எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள்?

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகியவை ஒரு கட்சி ஆட்சி முறைக்கு மாற்றாக கூட்டணியில் சேர்த்துக் கொள்வது, ஆனால் ஆட்சியில் பங்கில்லை என்ற விநோதமான போக்கை கையாண்டுள்ளன. இதுபோன்ற ஒரு கட்சி ஆட்சி முறையை பார்த்து மக்கள் சலிப்படைந்துள்ளனர். எல்லோருடைய பங்களிப்புடன் ஆட்சி நடைபெற வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.

அதன் வெளிப்பாடாகத்தான் புதிய தமிழகம், பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்தில் புதிய சிந்தனையுடன்கூடிய ஆட்சி மாற்றம் தேவை. அப்போதுதான் கீழிருந்து மேலே வரை ஊழல் ஒழியும். தமிழகம் உண்மையான வளர்ச்சிப் பாதையில் செல்லும். இது, கூட்டணி ஆட்சி வந்தால்தான் சாத்தியம். மாநிலத்துக்கு விடியல் பிறக்கும். திமுக, அதிமுக அல்லாத மாற்று அரசியல் உருவாக வேண்டும். இதுதான் புதிய தமிழகம் கட்சியின் பார்வையாகும்.

தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் மாற்றம் நிறைவேறியுள்ள நிலையில் உங்களது அடுத்த இலக்கு என்ன?

ஏழு பிரிவுகளை உள்ளடக்கிய தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் மாற்றம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. தலித் பட்டியலில் இருந்து வெளியேறிவிட்டால் அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் கிடைக்காமல் போய்விடும் என்று அச்சப்பட்டதால் தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் போன்ற கடலோரப் பகுதிகளில் வசிக்கும் கடையன் என்ற சாதியினருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் மாற்றத்துடன்கூடிய பட்டியல் மாற்றம்தான் எங்களது பிரதான இலக்காகும்.

இந்தபெயர் மாற்றத்துக்கு வெள்ளாளர், கொங்கு வேளாளர் போன்ற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே?

இந்தியா என்ற அகண்ட தேசத்தில் இந்துக்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் 1,000 ஆண்டுகள் இஸ்லாமியர், ஆங்கிலேயர் போன்ற அந்நிய படையெடுப்புகளுக்கு ஆளாகியது. தேவேந்திர குல வேளாளர்கள் இந்த பூர்வீகத்தின் இந்து பண்பாடு, பாரம்பரியமிக்க சமுதாயமாகும். அந்த சமுதாயத்தை பெரும்பான்மை இந்து மக்களுடன் இணைப்பதற்குத்தான் குரல் கொடுக்க வேண்டுமே தவிர, அவர்களைப் பிரித்து பார்த்து இந்து என்ற கட்டமைப்பை பலவீனப்படுத்தி விடக்கூடாது. மூத்த தொல்குடி இந்து மக்களை அரவணைக்க வேண்டும்.

எதை மையப் புள்ளியாக வைத்து தேர்தலை எதிர்கொள்வீர்கள்?

தேர்தலாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் மாற்றத்துடன்கூடிய பட்டியல் மாற்றத்தை மையமாகக் கொண்டே எங்கள் செயல்பாடுகள் இருக்கும். இந்த ஒன்று மட்டுமே தேர்தலில் பிரதானமாக இருக்காது. ஆனால், இது முக்கியப் பங்காற்றும். எங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க இத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டும் என்பதும் அவசியம். அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டோம்.

எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவீர்கள். உங்களது மகனும் போட்டியிடுவாரா?

என்னை மையமாக வைத்து எப்போதும் சிந்திப்பதில்லை. 2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்டோம். புதிய தமிழகம், தேவேந்திர குல வேளாளர், தென்மாவட்ட மக்களின் நலனை, தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம். கட்சியின் பிரதிநிதித்துவத்தையே முன்னிலைப்படுத்துவேன். நான் போட்டியிடுவது, எனது மகன் போட்டியிடுவதை கட்சியின் உயர்மட்டக் குழு முடிவு செய்யும். வரும் மார்ச் 15-ம் தேதி வரை மாவட்ட அளவில் கூட்டம் நடைபெறும். அதன்பிறகு கட்சியின் உயர்மட்டக் குழு கூடி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான முடிவுகளை எடுக்கும்.

தமிழகத்தில் மாற்று அரசியல் சாத்தியமா?

தமிழகத்துக்கு விடிவுகாலத்தை உருவாக்கித் தர முடியுமா, மாற்று சிந்தனையாளர்களை, முற்போக்கு சிந்தனையாளர்களை ஒருங்கிணைக்க முடியுமா என்றும், மாற்றம் என்ற விடியலை நோக்கி இவர்கள் பயணிப்பார்களா எனவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் உருவாக வேண்டும் என்ற சிந்தனைக் கருத்தோட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்.

ஏன் திமுக, அதிமுக என்ற இரண்டு அரசியல் கட்சிகளுக்கு பின்னால் மட்டுமே போக வேண்டும். இதற்கு மாற்றாக எல்லோரும் சேர்ந்து ஒரு கூட்டணி ஆட்சியை உருவாக்க முடியும் என்ற சிந்தனையைத் தூண்ட விரும்புகிறேன். ஆட்சி என்றால் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x