Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM

5 மாநில பேரவை தேர்தல்களில் பாஜக தோற்கும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா கருத்து

5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடையும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். மதுரை வண்டியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாளை அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு தொடர்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை நேற்று சந்தித்து கூறியதாவது:

மதுரை மாநகரில் 18-ம் தேதி (நாளை) மாநில அளவிலான மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக தலைமையிலான அணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து தான் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜகவின் தலைவர்கள் தொடர்ந்து தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

வரவிருக்கும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடையும். தேர்தல் முடிவுகளை தொடர்ந்து பாஜக வீழ்ச்சி அடையும். பாஜக தலைவர்களின் பதற்றத்தில் இதனை உணர முடிகிறது.

இடஒதுக்கீடு கொள்கையை தகர்ப்பதை நோக்கமாக வைத்து தான் பொதுத்துறைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நீட் தேர்வு உள்பட மாநில உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. அதிமுக மாநில உரிமைகளை பாதுகாக்க குரல் கொடுக்கும் கட்சியாக இல்லை. பாஜகவுக்கு அடிப்பணியும் கட்சியாக, ஆட்சியாக தான் உள்ளது. எனவே தமிழகத்தை மீட்க வேண்டும். அதற்கான அரசியல் மாற்றத்தை கொண்டு வர தான் மாநாடு நடத்தப்பட உள்ளது. மதுரை மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டி.ராஜா அளித்த பதில்கள் வருமாறு:

7 சாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குள வேளாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

பாஜக சாதிக் கட்டமைப்பை காப்பாற்றி. அந்த சாதி கட்டமைப்பின் மீது நின்று தன்னுடைய அரசியல் அதிகாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என்று தீவிரமாக முயல்கிறது. தமிழகத்தில் பாஜகவினால் காலூன்ற முடியவில்லை. பழைய சாதி கட்டமைப்பை மீண்டும் திணித்து ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க முயற்சிக்கிறது.

ஆனால், இதற்கு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் பலியாகிவிட மாட்டார்கள் என்று நம்புகிறோம். ஏனென்றால் தமிழகம் பெரியார், அயோத்திதாசர் உள்ளிட்டோர் பிறந்த மண். எனவே, பாஜக சாதியை தனது அரசியல் கருவியாக எடுப்பது தமிழகத்தில் எடுபடாது.

7 தமிழர்கள் விடுதலையில் குடியரசு தலைவர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் உட்பட பல கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மாநில அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. மத்திய அரசு அதனை ஏற்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசின் நிலை என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதா? எத்தனை இடங்களை கேட்க உள்ளீர்கள்?

இன்னும் அமைப்பு ரீதியாகபேச்சுவார்த்தைகள் தொடங்கப்படவில்லை. ஆனால், வரக்கூடிய நாட்களில் பேச்சுவார்த்தை தொடங்கலாம். எத்தனை இடங்கள் என்பதை பொறுத்தவரை எங்களுடைய பலத்துக்கு ஏற்ப எதார்த்தமாகவும், அனைத்து கட்சிகளையும் ஒன்றுபடுத்தி முன்கொண்டு செல்லும் வகையில் அதனை ஒட்டிய நிலைப்பாட்டை மேற்கொள்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x