Last Updated : 16 Feb, 2021 07:54 AM

 

Published : 16 Feb 2021 07:54 AM
Last Updated : 16 Feb 2021 07:54 AM

தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் முனைப்பில் அதிமுக: எண்ணிக்கையுடன், போட்டியிடும் இடங்களும் முடிவு

சென்னை

தங்கள் கட்சியினரிடம் விருப்ப மனுக்களை பெறும் அதே நேரத்தில், கூட்டணி கட்சிகளுடன் பேசி தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் முனைப்பில் அதிமுக உள்ளது. குறிப்பாக, போட்டியிடும் இடங்களுடன், எந்த தொகுதி என்பதும் சேர்த்தே முடிவு செய்யப்படுகிறது, தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுகவை பொறுத்தவரை கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் இவை தான் என்பது முடிவாகிவிட்டது. அதே நேரம் அதிமுகவில் பாமக, பாஜக கட்சிகளுடனான கூட்டணியில் மட்டும் முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளுடன் இன்னும் தொகுதி பேரம் முடியவில்லை. இதற்கிடையில், நேற்று முன்தினம் பிரதமர் மோடி சென்னை வந்த போது, அவரிடம் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள், தொகுதிகள் குறித்து தெரிவிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்தே, ஜெயலலிதா பிறந்த தினத்தில் அதிமுக விருப்ப மனுக்களை பெறும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதுதவிர, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் தொகுதி பங்கீடு என இரண்டையும் சேர்த்தே பாமகவுடனான பேச்சு சென்று கொண்டிருக்கிறது. இடஒதுக்கீடு முடிவாகும் பட்சத்தில் தொகுதி பங்கீடும் முடிவுக்கு வரும் என இருதரப்பிலும் கூறப்படுகிறது. அதே நேரம், தற்போது கூட்டணியில் உள்ள தேமுதிக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவற்றுக்கான தொகுதி பங்கீடு இன்னும் முடிவாகவில்லை.

இதற்கிடையில், திமுக கூட்டணியில் திமுக 170 தொகுதியில் போட்டிட திட்டமிட்டுள்ளதால், அதே போல், அதிமுகவும் 170 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும், பாஜகவுக்கு 20, பாமகவுக்கு 25, தேமுதிகவுக்கு 10, தமாகாவுக்கு 7, கிருஷ்ணசாமியின் புதியதமிழகம் கட்சிக்கு 2 ஒதுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

மேலும், டெல்லியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை திறக்க முதல்வர், துணை முதல்வர் இருவரும் 20-ம்
தேதிக்குப்பின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் உள்ளது. எனவே, அங்கு பாஜகவுடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்யப்படலாம் என்றும், மற்ற கட்சிகளுடன் பிப்.24-ம் தேதிக்குப்பின் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதர கட்சிகள்

இதுதவிர கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில், கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். தற்போது தேர்தல் முன்னேற்பாடுகள் நடைபெறும் நிலையில், இவர்கள் மூவருடனும் இதுவரை அதிமுக தலைமை பேசவில்லை. இதன் மூலம் இவர்கள் அதிமுகவுடன் கூட்டணியில் தொடர்கிறார்களா என்பது தெரியவில்லை. அதே போல், ஆர்.சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் இந்த தேர்தலில் இடம் உள்ளதா என்பது தெரியவில்லை.

2016 தேர்தலைப்போல், சிறிய கட்சிகளின் வேட்பாளர்களை அதிமுக தனது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்கும் என்றே கூறப்படுகிறது. இருப்பினும், இம்மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்பதால், அதற்கு முன்னதாக கூட்டணி இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x