கள நிலவரம்: தூத்துக்குடி தொகுதி யாருக்கு?

கள நிலவரம்: தூத்துக்குடி தொகுதி யாருக்கு?
Updated on
2 min read

ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்ற ஒன்று மட்டுமே போதும் கனிமொழிக்கு எளிமையான வெற்றியைப் பெற்றுத்தர என்ற நிலைமை மாறி தமிழிசையும் கணிசமான வாக்குகளைப் பெறும் சூழலே தூத்துக்குடியில் நிலவுகிறது.

தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழியும், அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளரும் தமிழக பாஜக தலைவருமான தமிழிசையும், அமமுக சார்பில் புவனேஸ்வரனும் களம் காண்கின்றனர்.

இப்போதைய நிலவரப்படி கனிமொழிதான் வெற்றி வேட்பாளர் என்று அறியப்பட்டாலும்கூட அது எளிமையான வெற்றி என்று சொல்லிவிட முடியாது.

தூத்துக்குடியில் இந்து மக்கள் 69.7%, கிறிஸ்தவ மக்கள் 24.7%, முஸ்லிம் மக்கள் 5.5% உள்ளனர். பாஜகவின் இலக்கு இந்து மக்கள், இந்து நாடார் மக்களின் வாக்குகள்.

திமுகவின் இலக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு வாக்காளர்கள், மீனவர்கள், சிறுபான்மையினர், வணிகர்கள், மதச்சார்பின்மை கொள்கை கொண்டவர்களின் வாக்கு. காயல்பட்டினம் ஓட்டுகள் எல்லாம் கனிமொழிக்கே என்று நம்பப்படுகிறது.

தூத்துக்குடி டவுனில் மட்டும் 2 லட்சம் வாக்குகள் உள்ளன. இவை அனைத்துமே திமுகவுக்கே என்றே கணிக்கப்படுகிறது. அதேபோல், மீனவர்கள், சிறுபான்மையினர் வாக்குகளும் திமுகவுக்கே சாதகமாக உள்ளன.

ஆனால், தமிழிசைக்கு எல்லாம் யார் வாக்களிக்கப் போகிறார்கள் என்ற திமுகவின் கணிப்பு தவறியுள்ளது. சாத்தான்குளம், உடன்குடி பகுதிகளில் தமிழிசை செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்து நாடார் ஓட்டுகள் தமிழிசைக்குத்தான் என்கிறது கள நிலவரம்.

ஸ்ரீவைகுண்டம், கயத்தாறு, கடம்பூரில் உள்ள தேவர் இன வாக்குகளை அமமுக வேட்பாளர் புவனேஸ்வரன் பிரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

தொகுதியில் பணப்பட்டுவாடாவுக்கு இரண்டு கட்சிகளுமே ஆயத்தமாகிவிட்டன. கடைசி இரண்டு நாட்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.

2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக)

கனிமொழி கருணாநிதி (திமுக)

புவனேஸ்வரன் (அமமுக)

பொன் குமரன் (மநீம)

கிறிஸ்டன்டைன் ராஜாசேகர் (நாம் தமிழர்)

கருத்து கணிப்பு

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் ஆகிய இருவரும் நேரடியாக மோதுவதால் தூத்துக்குடி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. இதில் கனிமொழி முன்னணியில் உள்ளார். தமிழிசை 2-ம் இடத்திலும், நாம் தமிழர் கட்சியின் கிறிஸ்டண்டைன் ராஜசேகர் 3-ம் இடத்திலும் உள்ளனர். அமமுக புவனேஸ்வரன் 4-ம் இடத்தில் உள்ளார்.

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in