

தமிழக தலைநகர் சென்னையை ஒட்டியுள்ள மக்களவைத் தொகுதி திருவள்ளூர் (தனி). இத்தொகுதியில், பட்டியலின சமூகத்தினர் அதிக அளவிலும், அவர்களுக்கு அடுத்த அளவில் வன்னியர் சமூகத்தினரும் வசிக்கின்றனர். முதலியார், நாயுடு சமூகத்தினர், சிறுபான்மையினரும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில், டாக்டர் வேணுகோபால் (அதிமுக), ஜெயக்குமார் (காங்கிரஸ்), பொன்.ராஜா (அமமுக), டாக்டர் லோகரங்கன் (மக்கள் நீதி மய்யம்), வெற்றிச்செல்வி (நாம் தமிழர் கட்சி), அன்புச்செழியன் (பகுஜன் சமாஜ் கட்சி) உள்ளிட்ட 20 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இதில், இரு முறை வெற்றிக்கனியை பறித்த டாக்டர் வேணுகோபால், 3-வது முறையாக களம் காண்கிறார். எளிமையானவர், பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் என, அனைவரிடமும் நட்பு பாராட்டக்கூடியவர் என்பது அவரது பலம். அமமுகவால் சற்று சரிந்துள்ள தங்களின் வாக்கு வங்கியை, கூட்டணிக்கட்சிகளான புரட்சி பாரதம், பாமக, தேமுதிக உள்ளிட்டவை ஈடுகட்டும் என்பது அதிமுகவின் எதிர்பார்ப்பு.
காங்கிரஸ் வேட்பாளரான ஜெயக்குமார் தொகுதிக்குப் புதியவர். அதிமுகவுக்கு சமமான வாக்கு வங்கியை வைத்துள்ள திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள், பாஜக, அதிமுக மீதான பொதுமக்களின் அதிருப்தி தங்களுக்கு சாதக சூழலை ஏற்படுத்தும் என்கிறார்கள் காங்கிரஸார்.
அமமுக வேட்பாளரான பொன்.ராஜா, கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில், பொன்னேரி(தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர், தொகுதியில் ஓரளவு அறிமுகமான முகம் என்பது அவரது பலம். அதிமுக மற்றும் பாமகவின் தீவிர விசுவாசிகளிடையே உள்ள பாஜக- அதிமுக-பாமக கூட்டணி மீதான எதிர்ப்பு அலை தங்களுக்கு கணிசமான வாக்குகளை பெற்றுத்தரும் என்பது, அமமுகவின் கணிப்பு.
ஆகவே, இந்த மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், அமமுக வேட்பாளர்களிடையே தான் என்கிறார்கள். அரசியல் பார்வையாளர்கள். இந்த மும்முனை போட்டியில், வெற்றிக்கனியை 3-வது முறையாக பறிக்குமா அதிமுக?; தட்டிப்பறிக்குமா கை? என்பது, தொகுதியின் 19,20,372 வாக்காளர்களின் கைகளில்.
தொகுதி குறித்த கருத்துக் கணிப்பு
இணையதள கருத்துக் கணிப்பு முடிவின் படி, திருவள்ளூர் தனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஜெயக்குமார் முந்துகிறார். அதிமுகவின் வேணுகோபால் இரண்டாம் இடம் பிடிக்கிறார். அமமுக மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.
முக்கிய குறிப்பு:
இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால், குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண: