

உடல்நிலை ஒத்துழைக்காத நிலையிலும், பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வந்த அதிமுக அவைத்தலைவர் இ.மதுசூதனன், அதிருப்தியில் அமமுகவில் இணைந்தவர்களை மீண்டும் அதிமுகவுக்கு அழைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடக்கும் பெரம்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் ஆர்.எஸ்.ராஜேஷ். இவர் அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனனின் தீவிர ஆதரவாளர். வட சென்னை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்த பு.வெற்றிவேல், அமமுகவில் இணைந்ததால், மதுசூதனனின் ஆசியோடு அந்த இடத்தைப் பிடித்தார் ஆர்.எஸ்.ராஜேஷ். இவர் தற்போது பெரம்பூர் தொகுதியில் போட்டியிடவும் மதுசூதனன்தான் காரணம் என்று கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆர்.எஸ்.ராஜேஷை வெற்றிபெற வைப்பதில் மதுசூதனன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
பேரவையில் குறையும் பலம்
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, உடல்நலக் குறைவால் எம்எல்ஏக்கள் இறப்பது போன்ற காரணங்களால் சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களின் பலம் குறைந்து வருகிறது. இதனால் அதிமுக ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, அதிமுகஆட்சி, 5 ஆண்டுகளை நிறைவுசெய்ய வேண்டும் என்றால், தற்போதுநடைபெறும் 18 தொகுதி இடைத்தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் அதிமுக 519 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது. இந்த சூழலில், அதிமுக மீது அதிருப்தியில் இருந்த நிர்வாகிகள் பலர் தற்போது அமமுகவில் இணைந்து தேர்தல் பணியாற்றி வருவது பெரம்பூர் தொகுதி அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால், வெற்றி வாய்ப்பு சந்தேகமே என்றும் கூறப்படுகிறது.
இதை கருத்தில்கொண்ட அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன், தொகுதியில் அதிமுகவின் பலத்தை அதிகரிக்கும் வகையில், தனது உடல் ஒத்துழைக்காத நிலையிலும் நேற்று பெரம்பூர் தொகுதிக்கு வந்தார்.
அமமுக பணிமனைகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு சென்ற அவர், அதிமுக மீதான அதிருப்தியால் அமமுகவில் இணைந்து தேர்தல் பணியாற்றி வருவோரை அடையாளம் கண்டு, அதிமுகவுக்கு தேர்தல் பணியாற்ற வைக்கும் பணியில் ஈடுபட்டார்.
வியாசர்பாடி பகுதிக்கு வந்த மதுசூதனன், அமமுக தேர்தல் பணிமனையில் இருந்த சில நிர்வாகிகளை அழைத்து, அவர்களின் கைகளையும், தோளையும் பிடித்துக்கொண்டு, ‘‘பழைய பிரச்சினையெல்லாம் மறந்துடுங்க. தேர்தல் பணியாற்ற நீங்கள்லாம் அதிமுகவுக்கு திரும்பி வரணும்’’ என்றார்.
தொண்டர்கள் நெகிழ்ச்சி
சில தொண்டர்கள் மிகவும்நெகிழ்ந்துபோய், ‘‘செய்யலாம்ணா.. வந்துடலாம்ணா..’’ என்றனர். ‘‘அப்பா காலத்தேர்ந்து இருக்கோம்ணா.. என்ன செஞ்சீங்க.. நானும் அப்டியே இருந்துடணுமா..’’ என்று சிலர் உரிமையோடு அவரிடம் ஆதங்கப்பட்டுவிட்டு சென்றதையும் காண முடிந்தது.
இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘அதிமுக மீதான அதிருப்தியில் விலகிச் சென்றவர்களை அழைத்துப் பேசுவதில் எந்த தவறும் இல்லை. சண்டை போட்டாலும் அவர்கள் எங்கள் குடும்பத்தினர்தான். மதுசூதனனின் முயற்சி நிச்சயம் பெற்றி பெறும். அதிமுக அதிருப்தியாளர்கள் அனைவரும், மதுசூதனின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து மீண்டும் அதிமுகவுக்கு தேர்தல் பணியாற்ற வருவார்கள். அதிமுக வேட்பாளர் கட்டாயம் வெற்றி பெறுவார்’’ என்றனர்.