Published : 01 Apr 2019 11:08 AM
Last Updated : 01 Apr 2019 11:08 AM

தாமதமாக குற்றவுணர்வுடன் வந்திருக்கிறேன்; இனி என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகத்தான்: கமல்ஹாசன் பேச்சு

இனி தன் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகத்தான் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ஏஎஃப்டி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:

''நான் களத்தில் இறங்க மாட்டேன் என சொன்னார்கள். மூன்றே மாதங்களில் களமிறங்கி விட்டேன். கிராமங்களுக்குச் செல்ல மாட்டேன் என்றார்கள். ஆனால், நாங்கள் கிராமத்தில் இருந்து தான் தொடங்கினோம். எங்களுக்கு நல்ல யோசனைகள் கொடுப்பதே எங்களின் விரோதிகள் தான். அவர்கள் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்திருந்தால் எங்களுக்கு இந்த யோசனையே வந்திருக்காது.

அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்ட ஆள்காட்டி விரலில் மை போதும். நாங்கள் தனித்து நிற்கிறோம். மற்றவர்களெல்லாம், சபரிமலைக்குச் செல்பவர்கள் யானைகளின் பயத்திற்காக ஒன்றாக குழுமி செல்வார்களே அப்படி சென்று கொண்டிருக்கின்றனர். சேராத கூட்டமெல்லாம் சேர்ந்துவிட்டது. கூடிக் கலைவது கூட்டம்; இது சங்கமம்.

தமிழக அரசியல் என் வாழ்க்கையை மாற்றியுள்ளது. என் வாழ்க்கை, என் தொழில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இதில் வந்திருக்கிறேன். என்னை புகழின் உச்சியில் வைத்த மக்களுக்கு நான் செய்தது என்ன என நான் என்னைக் கேட்டுக்கொண்ட போது, குற்ற உணர்வுடன் தாமதமானாலும் பரவாயில்லை என, மக்களைத் தேடி வந்திருக்கிறேன். நான் சொல்வது சினிமா வசனம் அல்ல. இனி என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகத்தான்"

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x