Published : 26 Mar 2019 05:29 AM
Last Updated : 26 Mar 2019 05:29 AM

ஜெ. பிரச்சார பலம் இல்லாததால் தடுமாறுகிறது அதிமுக: தொண்டர்கள் கலக்கம்

ஜெயலலிதா போன்ற மக்களின் மனம் கவர்ந்த தலைவரின் பிரச்சாரப் பலம் இல்லாததால், தேர்தல் களத்தில் அதிமுகவுக்கு பெரிய வெற்றிடம் ஏற்பட்டு, அக்கட்சி தடுமாறுகிறது. மேலும், அமமுகவின் வியூகத்தால் அதிமுக கலக்கமடைந்துள்ளது.

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளுடைய பார்வையும் மக்களவைத் தேர்தலை நோக்கி இருக்கும் நிலையில் அதிமுகவோ இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

அதிமுக தனது ஆட்சியைத் தக்கவைக்க 18-ல் குறைந்தபட்சம் 6 தொகுதிகளில் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக-அதிமுக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இத்தொகுதிகளில் அமமுக வேட்பாளர்களும் அதிமுகவுக்கு கடும் சவாலாகத் திகழ்கின்றனர். அதிமுகவின் வெற்றி, தோல்வி அமமுக பெறும் வாக்குகளைச் சார்ந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஜெயலலிதா போன்ற மக்களின் மனம் கவர்ந்த தலைவர் இல்லாததால் அதிமுகவின் பிரச்சார பலம் பலவீனமடைந்துள்ளதாகவே கருதப்படுகிறது. அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தில், யாருமே நிரப்ப முடியாத வெற்றிடம் காணப்படுகிறது. முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பிரச்சாரம் தற்போது வரை பெரியளவில் மக்களைக் கவரவில்லை. இது அதிமுகவினரை கவலையடையச் செய்துள்ளது.

 ஆனால், ஆளும் கட்சி என்ற அதிகார பலம், பண பலம், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு வெற்றிக்கு கைகொடுக்கும் என்று அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர். அதேநேரத்தில் டிடிவி.தினகரன் பேச்சு மக்களை ஈர்க்கக்கூடியதாக உள்ளது. அதனால், அவரது பிரச்சாரத்தை அமமுக நம்பியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவரது மகன் ரவீந்திரநாத் குமார் தேனியில் போட்டி யிடுவதால் அந்தத் தொகுதியை தாண்டி அவரால் சிந்திக்க முடியவில்லை. கூடவே இளங்கோவனும், தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிடுவதால் அவரது மகனின் வெற்றி அவ்வளவு எளிதல்ல. கட்சியைத் தாண்டி அவரது எதிர்கால அரசியலுக்கு முக்கியமானதாகவும், கவுரவப் பிரச்சினை யாகவும் கண் முன்னே நிற்கிறது.

இடைத்தேர்தல் தொகுதிகளில் அமமுக பெறும் ஒவ்வொரு வாக்கும், அதிமுக வெற்றியைப் பாதிக்கும் என்பதால், தற்போது இந்த தொகுதிகளில் அமமுகவினரை வளை க்கும் முயற்சியில் அதிமுகவினர் இறங்கி உள்ளனர். இதுகுறித்து அதிமுக முக்கிய நிர்வாகி கள் கூறியதாவது:இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் திமுகவைவிட பெரிய வாக்குகள் வித்தி யாசத்தில் அதிமுக வெற்றி பெறவில்லை. முன்பு ஜெயலலிதாவின் பிரச்சார பலம், ஒருங்கிணைந்த அதிமுகவின் வாக்கு வங்கி உள்ளிட்டவை வெற்றியைத் தேடித் தந்தது. தற்போது கட்சியின் அடிப்படை வாக்கு வங்கியுடன், வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கும் வெற்றிக்கு அவசியமாகிறது.

டிடிவி.தினகரன், அதிமுகவை சட்டப் பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெறாமல் தடுப்பதன் மூலம், கட்சியையும், இரட்டை இலையும் கைப்பற்றுவதற்கான முதல் அடியை எடுத்து வைக்கலாம் என்று கணக்குப்போடுகிறார். அதனால், இடைத்தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் மக்களவைத் தொகுதியை விட சட்டப் பேரவை இடைத்தேர்தலுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும்படி அதிமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் அதிமுக வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் பெறுவதற்கு அமமுக முக்கிய நிர்வாகிகளையும், கட்சியினரையும் அதிமுகவினர் ரகசியமாக சந்தித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வளைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அதிமுகவுக்கு வந்தால் கட்சியில் பதவி, உள்ளாட்சித் தேர்தலில் ‘சீட்’ என்று பதவி ஆசையைக் காட்டி, அமைச்சர்களும், அக்கட்சி மாவட்டச் செயலாளர்களும் திரைமறைவில் அமமுகவினரிடம் பேரம் பேசி வருகின்றனர். இந்தப் பாசவலை திட்டம் எந்தளவுக்கு வெற்றிபெறும் என்று தெரியவில்லை, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x