Published : 18 Mar 2019 08:50 AM
Last Updated : 18 Mar 2019 08:50 AM

வெற்றிக் கணக்கை தொடங்கிவைத்த தொகுதி; திண்டுக்கல் கைநழுவியதில் அதிமுகவினர் வருத்தம்

அதிமுகவின் வெற்றிக் கணக்கை தொடங்கிவைத்த திண்டுக்கல் தொகுதியை, கோஷ்டிப் பூசல் காரணமாக கூட்டணிக் கட்சிக்கு வழங்கியிருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கட்சித் தலைமை திண்டுக்கல்லில் போட்டியிட விரும்பியபோதும், கோஷ்டிப்பூசல் காரணமாக கைவிடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக மாவட்ட நிர்வாகிகள் மீது தொண்டர்கள் புகார் கூறுகின்றனர்.

1972-ல் அதிமுகவை தொடங்கினார் எம்ஜிஆர். அக்கட்சி முதன்முதலில் தேர்தல் களத்தில் இறங்கியது திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் தான். 1973-ல் நடந்த இத்தேர்தலில் அதிமுகவுக்கு ‘இரட்டை இலை’ சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த சின்னத்தை தேர்வு செய்தவர் அப்போது அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மாயத்தேவர். அந்த தேர்தலில் கடும் போட்டிகளுக்கு இடையே திமுக, காங்கிரஸ் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, அதிமுகவின் வெற்றிக் கணக்கை தொடங்கிவைத்தார் மாயத்தேவர்.

7 முறை வென்ற தொகுதி

இத்தொகுதியில் அதிமுக அதிகபட்சமாக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிலும் 4 முறை தற்போதைய அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுகவுக்கு முதல் வெற்றியை தந்த தொகுதி என்ற சென்டிமென்ட் காரணமாக, எம்ஜிஆர் இருந்தபோதும் சரி, அவரை தொடர்ந்து கட்சியை ஜெயலலிதா வழி நடத்தியபோதும் சரி.. திண்டுக்கல் மக்களவைத் தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுத்ததே இல்லை. ஆனால், முதல்முறையாக திண்டுக்கல் தொகுதி கைவிட்டுப் போனதில் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

காரணம் என்ன?

திண்டுக்கல் தொகுதியில் அதிமுக போட்டியிட வேண்டும் என கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இருவரும் கடைசிவரை முயற்சித்தனர். ஆனால், முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் - தற்போதைய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் இடையிலான கோஷ்டி பூசலால், அவர்களது எண்ணம் நிறைவேறவில்லை.

பின்வாங்கிய நிர்வாகிகள்

திண்டுக்கல்லில் போட்டியிடுமாறு முதலில் நத்தம் விஸ்வநாதனைத்தான் கட்சித் தலைமை கேட்டுள்ளது. அவர் மறுத்ததால், அவரது மருமகன் கண்ணனை போட்டியிட வைக்க முயற்சி நடந்தது. கோஷ்டி பூசலால் காலைவாரிவிட்டுவிடுவார்கள் எனபயந்து, அவரும் பின்வாங்கியுள்ளார்.

இதன் பிறகு, அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மற்றும் மாவட்டச் செயலாளர் மருதராஜ் ஆகியோரை கட்சித் தலைமை அழைத்துப் பேசியுள்ளது. அவர்களும் ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து, மாவட்டச் செயலாளரையே வேட்பாளராக நிறுத்தகட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. அவரும் பின்வாங்கியதால், வேறு வழியின்றி கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வெற்றிக்கு என்ன வழி?

‘‘திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்க இருந்த திண்டுக்கல்தொகுதியை திமுகவினர் போராடிப் பெற்றுள்ளனர். அதேபோல அதிமுகவினரும் அந்த தொகுதியை தக்கவைத்திருக்க வேண்டும். கட்சித் தலைமை விரும்பியபோதிலும், கோஷ்டிப் பிரச்சினை மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் தயக்கம் காரணமாக, அதிமுகவின் கோட்டையான திண்டுக்கல்லை கைநழுவ விட்டுவிட்டோம். இது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்களை சமாதானப்படுத்தி, உற்சாகப்படுத்தினால் மட்டுமே, அதிமுக கூட்டணி இத்தொகுதியில் வெற்றிபெற முடியும்’’என்கின்றனர் தொண்டர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x