Last Updated : 26 Mar, 2019 07:41 AM

Published : 26 Mar 2019 07:41 AM
Last Updated : 26 Mar 2019 07:41 AM

பாஜகவின் எழுச்சி திமுக, காங்கிரஸிலும்கூட சிறுபான்மையினரை முடக்குகிறது!- பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

வேட்பாளர் தேர்வு தொடர்பாகக் கட்சிக்குள் கலகம் நடக்கும் பரபரப்பான சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸிடம் பேசினோம். சிறுபான்மையினருக்கான தொகுதிப் பங்கீடு, எதிர்த்தரப்புகளின் தேர்தல் வியூகம் குறித்துப் பேசினார்.

திமுகவைப் போலவே காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலிலும் முஸ்லிம்களுக்கு இடம் இல்லையே? இளைஞர்களுக்கு ராகுல் வாய்ப்பு தருவார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்திருக்கிறதே?

திருநெல்வேலி தொகுதியில் ஒரு கிறிஸ்தவருக்கும், ராமநாதபுரம் தொகுதியில் ஒரு இஸ்லாமியருக்கும் திமுக வாய்ப்பு கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பதையும், புதுமுகங்கள் இடம்பெறவில்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதைப் பற்றி இப்போது பேச விரும்பவில்லை. தேர்தல் முடிந்த பிறகு என் கருத்துகளை கட்சியின் தலைமைக்குத் தெரிவிப்பேன்.

பாஜகவின் எழுச்சி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிலும்கூட முஸ்லிம்களை முடக்கியிருக்கிறது என்று சொல்லலாமா?

ஆமாம். திராவிட இயக்கங்களின் எழுச்சி, எல்லோருக்கும் சமவாய்ப்பு கோரும் சமூக நீதிப் பார்வையிலானது. ஆனால், பாஜகவின் வளர்ச்சியோ ‘ஒரு எதிரியை அடையாளம் காட்டாமல் ஒரு வலுவான கட்சியை, வாங்குவங்கியைக் கட்டமைக்க முடியாது’ என்ற சர்வாதிகார பாணி அரசியல். தேவையில்லாமல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும் பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ்ஸும் பாஜகவும் திட்டமிட்டு நடத்தினார்கள். கூடவே, சிறுபான்மையினரின் நலனுக்கான விஷயங்களைப் பேசுவதே பெரும்பான்மையினருக்கு விரோதமானது என்பது போன்ற தோற்றத்தையும் சித்தரித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். கொள்கை, செயல்பாட்டின் அடிப்படையில் திமுகவை எதிர்கொள்ள முடியாமல், அது இந்துக்களுக்கு விரோதமான கட்சி என்று பிரச்சாரம் செய்வதும்கூட அந்தத் தந்திரத்தில்தான். சிறுபான்மையினர் தாங்கள் வாழ்வதற்கான சூழலையும், எங்களுடைய குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்றும் கேட்கிறார்கள். அது மறுக்கப்படும்போது ஜனநாயகம் பெரும்பான்மைவாதமாக மாறிவிடும்.

தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. மக்கள் மனநிலை எப்படியிருக்கிறது?

இந்திய நாடாளுமன்றத் தேர்தலை ஒவ்வொரு மாநிலமும் தங்களது கோணத்தில் பார்க்கின்றன. வங்க வாக்காளர்கள் அவர்கள் நலன் சார்ந்தும், குஜராத்திகள் அவர்கள் நலன் சார்ந்தும், ஆந்திர மக்கள் அம்மாநில உரிமை சார்ந்தும் தேர்தலை அணுகுகிறார்கள். ஆனால், பழனிசாமியும் பன்னீர்செல்வமும் புல்வாமா தாக்குதல் அடிப்படையில் தேர்தலைப் பார்க்கச் சொல்கிறார்கள். மாநில உரிமைகள் அனைத்தையும் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் மத்திய அரசுக்கு அடிமை சாசனமாக எழுதிக்கொடுத்துவிட்டு, நாட்டின் பாதுகாப்பு கருதி மோடிக்கு வாக்களியுங்கள் என்கிறார்கள். ஆனால், திமுகவின் தேர்தல் அறிக்கையோ தமிழகத்தின் உரிமைப் பிரகடனமாகவும், மத்தியில் ஆட்சி அமைந்தால் அதில் நாங்களும் இருப்போம், சொன்னதைச் செய்வோம் என்று கம்பீரமாகச் சொல்லும் அறிக்கையாகவும் இருக்கிறது. பெரம்பலூரில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரக் கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். வெறுமனே கூட்டம் கேட்க வருகிற ஆர்வத்தைத் தாண்டி மக்கள் மத்தியில் ஆரவாரமும், எழுச்சியும் மோடி, பழனிசாமி, பன்னீர்செல்வத்துக்கு எதிரான அலை தமிழ்நாட்டில் வீசுவதை உணர்த்தியது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x