Published : 21 Mar 2019 04:32 PM
Last Updated : 21 Mar 2019 04:32 PM

குடும்ப அரசியல் செய்கிறதா திமுக? வாரிசு என்பதால் வாய்ப்பு கொடுக்கப்பட்டதா? - தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி

கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலத்திற்கும் மேலான இலக்கியப் பணி கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனுக்குச் சொந்தமானது. எஞ்சோட்டுப் பெண், மஞ்சணத்தி, பேச்சரவம் கேட்டிலையோ, வனப்பேச்சி உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள், சமகால கவிஞர்களின் படைப்புகள் குறித்த விமர்சன கட்டுரைகளின் தொகுப்புகள் உள்ளிட்டவற்றை எழுதியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் ஆங்கில படைப்பிலக்கிய வெளிப்பாடுகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இதுவே அவருடைய எழுத்துப்பணிக்கும், ஈழம், அம்மக்கள் சார் இலக்கியத்தில் அவருக்குள்ள தனித்த ஆர்வத்திற்கும் சான்றாகும்.

தமிழச்சி தென் சென்னை திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்து அவரது தந்தை தங்கபாண்டியன், சகோதரர் தங்கம் தென்னரசு ஆகியோரின் வழியில் வாரிசு அரசியல் காரணமாகவே அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், திமுகவின் களச் செயல்பாடுகளில் தமிழச்சியின் பங்கு என்ன என்பது குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விமர்சனங்கள் மட்டுமின்றி, இலக்கியம் - அரசியல் குறித்த பல கேள்விகளுக்கு தமிழச்சி தங்க பாண்டியன் அளித்த பதில்கள்.

எழுத்துக் களம் என்பது வேறு; அரசியல் என்பது வேறு, சமரசங்கள் நிறைந்த தேர்தல் அரசியலில் எப்படி இயங்க உள்ளீர்கள்?

என் எழுத்துகள் எல்லாமும், குறிப்பாக பெண்கள் குறித்து நான் எழுதியவை தனிப்பட்ட எழுத்துகள் அல்ல, அவையெல்லாம் அரசியல் பிரதிகள் தான். ஆங்கிலம் படித்துவிட்டு, நான் தமிழில் எழுதுவதே அரசியல் செயல்பாடு தான். ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை, பாட்டாளி வர்க்க பெண்களுக்கானது என் எழுத்து. பிரச்சார ரீதியாக இல்லையென்றாலும், அவர்களின் வாழ்வைத் தான் என் இலக்கியம் பதிவு செய்யும். பேரறிவாளன் விடுதலை உட்பட பல சமூகப் பிரச்சினைகளில் மனித உரிமைக் குரலாக படைப்பாளிகளின் குரல் ஒலிக்கின்றது. அந்தக் குரலை இன்னும் தீவிரமாக எடுத்துச்செல்ல அரசியல் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வேன் என எண்ணுகிறேன். என்னைப் பொறுத்தவரை அரசியல் - எழுத்து இரண்டும் வெவ்வேறானது அல்ல.

படைப்பாளியாக ஆடம்பரமாக இருக்க வேண்டும் என நினைக்கமாட்டோம். ஆனால், தேர்தல் களத்தில் சிலர் ஆர்வம் மிகுதியால் ஏதேனும் சொல்லும்போதோ, செய்யும்போதோ நம்மக்கு கூச்சமாகவும், தர்ம சங்கடமாகவும் இருக்கும்.

எழுத்து, இலக்கியச் செயல்பாடுகள் என பயணித்துக் கொண்டிருக்கையில், அரசியலில் ஈடுபட வேண்டும் என எந்தத் தருணத்தில் தோன்றியது?

அரசியல் எனக்குப் புதிதல்ல. குடும்பம் குடும்பமாக அரசியலில் தான் இருக்கிறோம். ராமநாதபுரம் மக்கள் என்னை நன்றாக அறிவார்கள். 1985-லிருந்து சென்னையில் இருக்கிறேன். 2009-ல் ராமநாதபுரம் தொகுதிக்கு விருப்ப மனு அளித்த போது பெரும் விபத்தை எதிர்கொண்டேன். அப்போது வாய்ப்பு கிடைத்திருந்தாலும் தேர்தலை எதிர்கொண்டிருப்பேன். அச்சமயத்தில், வாய்ப்பு கிடைக்காத போதும் அதனால் வருத்தமோ, ஏமாற்றமோ அடையவில்லை. அதன்பிறகு, நான் தேர்தல் குறித்து சிந்திக்கவில்லை.

பாஜக ஆட்சியில் மக்கள் விரக்தியில் உள்ளனர். மிக முக்கியமான காலகட்டமிது. அதனால், இந்த முறை தேர்தலில் போட்டியிட வேண்டும் என மிகத்தீவிரமாக நினைத்தேன். 

இம்முறை உங்களையும் சேர்த்து 4 எழுத்தாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். எழுத்தாளர்களிடம் மக்கள் என்ன வித்தியாசமாக எதிர்பார்க்கலாம்?

எழுத்தாளர்கள் இம்முறை தேர்தல் களம் கண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சமூக நீதிக்கான குரலாக இருக்கும் கனி, பாட்டாளி மக்கள் குறித்து சிந்திக்கும் சு.வெங்கடேசன், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக உள்ள ரவிக்குமார் என எல்லோரும் திமுக அணியில் இருப்பது ஆரோக்கியமானது. அந்தப் பக்கம் அதிமுக அணியைப் பாருங்கள். கொத்தடிமையாக உள்ளனர்.

எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் என்றால், தலையில் கிரீடம் வைத்திருப்பார்கள் என்றெண்ணி, தனிமைப்படுத்திப் பார்க்க வேண்டியதில்லை. அவர்களும் மக்களிடத்தில் இருந்துதான் வருகின்றனர். அவர்களுடைய செயல்பாடுகளில் வித்தியாசங்கள் இருக்கலாம். அவர்களால் எந்தப் பிரச்சினைகளிலும் சமரசமின்றி சுதந்திரத்துடன் குரல் கொடுக்க முடியும். நாடகத் துறைக்கு கவனம், பெண்களுக்கான சில முன்னெடுப்புகள் உள்ளிட்டவற்றைச் செய்ய வேண்டும் என சின்ன சின்னக் கனவுகள் உள்ளன, அவற்றை சாத்தியப்படுத்த வேண்டும்.

கவிஞர் தமிழச்சியை தென் சென்னை மக்கள் அறிந்திருக்கிறார்களா?

என்னைப் பலரும் சுமதியாக அறிந்திருக்கின்றனர். நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது. எனினும், மக்களைச் சந்திக்கும்போது, திமுக மற்றும் தலைவர் ஸ்டாலினின் செயல்பாடுகள் குறித்து பகிர்ந்து கொள்கிறேன். எனக்கு ஒட்டுப் போடுங்கள் என வெறுமனே சொல்லவில்லை. மக்களுக்கு பகுத்தறிவு, விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நோக்கம். பெண்களுக்கும், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் திமுக செய்தவற்றை எடுத்துச் சொல்கிறேன்.

படைப்பாளியாக பாஜகவின் 5 ஆண்டுகால ஆட்சி குறித்து உங்களின் மதிப்பீடு என்ன?

ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் போக்கு அதிகமாகியுள்ளது. எல்லா விதத்திலும் கருத்துச் சுதந்திரம் பறிபோய் விட்டது. எதிர்கருத்தாளர்கள் கொல்லப்படுகின்றனர். எல்லாவற்றையும் ஒற்றைமயத்திற்குக் கீழ் கொண்டு வருவதற்கு பாஜக முயற்சி செய்தது. பொருளாதார சிதைப்பு, தன்னிச்சையான நிறுவனங்களின் அழிப்பு, சுதந்திரமான நிறுவனங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக எதிர்க்கட்சிகளின் மீது ஏவிவிட்டு மிரட்டும் தன்மை இவைதான் இந்த ஆட்சியில் நடந்திருக்கிறது. 

ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் வந்த பிறகு சிறு வணிகர்கள் காணாமல் போய் விட்டனர். இதனால், அண்ணாச்சி கடை அண்ணன், கீரைக்கார அம்மாவுக்கு ஏற்பட்ட இழப்புகளின் வலி எனக்குதான் தெரியும். இதையெல்லாம் நாங்கள் மக்களிடத்தில் கொண்டு செல்வோம்.

சிறுதெய்வ வழிபாடு உள்ளிட்டவற்றில் தாக்கம் கொண்டவர் நீங்கள். திமுக இந்துமதத்திற்கு எதிரானது என விமர்சிக்கப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

அப்படி இல்லவே இல்லை. திமுக இந்து மதத்திற்கோ, இந்துக்களுக்கோ எதிரானது அல்ல. எனக்கு ஆண்டாள், பக்தி இலக்கியங்களின் தாக்கம் உண்டு. என் அம்மா மத நம்பிக்கை உடையவர். பேச்சி, ராக்காச்சி என சிறுதெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுடைய பெண் நான். ஆனால், அது மூடப்பழக்கமாக மாறும்போது அதனை நாங்கள் எதிர்ப்போம். பாஜகவை எதிர்ப்பதென்பது, இந்துக்களை எதிர்ப்பதாகாது. நாங்கள் கடவுள் மறுப்பாளர்கள் தானே தவிர வெறுப்பாளர்கள் அல்ல. யாருடைய மத நம்பிக்கைகளிலும் திமுக குறுக்கிடுவது இல்லை.

உங்களை 'அழகான வேட்பாளர்' என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். ஏன் பெண்கள் அரசியலுக்கு வரும்போது அவர்களின் அழகோ, புறத்தோற்றமோ அதிக கவனம் பெறுகிறது?

தம்பி உதயநிதி வேறு அர்த்தத்தில் சொன்னார். அழகு என்பது புறத்தோற்றத்தில் இல்லை என்பது தான் அவர் கூறியது. என்னை நான் நேர்த்தியாக வெளிப்படுத்திக் கொள்ள நினைப்பேன். பெரிய டெரகோட்டா நகைகளை அணிந்திருக்கும் என்னைப் பார்த்து ஆடம்பரமாக இருப்பதாகச் சொல்வார்கள். மண்ணின் கலை பொருட்களுடன் என்னை நான் வெளிப்படுத்திக் கொள்கிறேன். அழகுணர்ச்சி வேறு. பொதுவெளியில் வந்தவுடன் புறத்தோற்றம் குறித்து கவலைப்படக் கூடாது என்பதில் நியாயமில்லை. அழகு என்பது பார்ப்பவர்களின் கண்களில் உள்ளது.

பெண் வேட்பாளர் என அடையாளப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. குடும்பம் உள்ளிட்ட நிறுவனங்களைத் தாண்டி பெண்கள் அரசியலுக்கு வருவது குறைவாக உள்ளது . அவற்றைத் தாண்டி அரசியலுக்கு பெண்கள் வருவது ஆரோக்கியமானது.

பெண்களுக்கு முன்னுரிமை தந்தது திராவிட இயக்கம் என திமுக தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால், திமுகவில் 2 பெண் வேட்பாளர்கள் தானே நிறுத்தப்பட்டுள்ளனர்?

தேர்தலில் வேட்பாளர்களாக 2 பெண்கள் தான் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பதாலேயே திமுக பெண்களுக்கு குறைந்த பிரதிநிதித்துவம் கொடுத்துவிட்டது என்று சொல்லக்கூடாது. பெரிய மாநாடுகளில் பெண்கள் பேசுவதற்கு அப்போதே மேடை அமைத்துக் கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம். தேர்தல் என்று வரும்போது, தொகுதியில் களத்தில் பணியாற்றியவர்கள், கூட்டணிக் கட்சிகளின் கருத்து என பலவற்றைக் கேட்டுத் தான் வேட்பாளர்களை முடிவு செய்வர். அடிமட்டத்திலிருந்து கட்சிப் பணியாற்றி உழைத்தால் மேல்நிலைக்கு வரலாம் எனக்கூடிய சான்றுகள் திமுகவில் தான் இருக்கின்றன.

இலக்கிய மேடைகளில் பரவலாக காணப்படுபவர் நீங்கள். ஆனால், திமுகவின் களச் செயல்பாடுகளில் உங்கள் பங்கு என்ன? வாரிசு அரசியலின் நீட்சியாகத் தான் நீங்கள் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக விமர்சனம் உள்ளதே?

ஆமாம். திமுக குடும்ப அரசியல், வாரிசு அரசியல் தான் செய்கிறது. திமுக மிகப்பெரிய குடும்பம். நாங்கள் வாரிசு தான் என பெருமையாக சொல்வோம். ஏனென்றால், பரம்பரை பரம்பரையாக அந்தக் கட்சியில் இருக்கிறோம். குடும்பத்துடன் மாநாடுகளுக்குச் செல்வோம். 'மிசா' காலத்தில் ஒன்றரை வருடங்கள் என் தந்தை சிறையில் இருந்தபோது வாரிசுகள் நாங்கள் தானே கஷ்டப்பட்டோம். சிறைக்குச் சென்றதால், உறவினர்களும் ஒதுக்கி வைத்துவிடுவர். மனதளவில் நாங்கள் கஷ்டத்தை அனுபவித்திருக்கிறோம். அந்தச் சமயத்தில் திமுகவினர் தான் எங்களுக்கு நல்லது, கெட்டது பார்த்தனர். திமுகவினர் தான் என் திருமண வேலைகளைக் கவனித்தனர். திமுகவில் உறவுகளையும், கட்சியையும் பிரிக்க முடியாது. தலைவர் கலைஞர் எங்களுக்கு அப்பா போன்றவர்.

அப்படியே வாரிசு அரசியல் என வைத்துக் கொண்டாலும், அத்தனை தகுதிகளுடன் படித்து, கட்சிப் பணியாற்றி தான் வந்திருக்கிறோம். எனக்கு 2007-ல் மாநில இளைஞரணி மாநாட்டில் கொடியேற்றும் வாய்ப்பை கலைஞர் கொடுத்தார். அதன்பிறகு கலை இலக்கியப் பிரிவுகளில் வாய்ப்பு, மேடைகள், கட்சிப் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. ஊராட்சி மன்றங்கள், மகளிர் அமைப்புகளில் பணியாற்றியுள்ளேன். விமர்சனம் சொல்பவர்களுக்குத் தெரியவில்லை என்பதற்காக நான் களத்தில் செயலாற்றவில்லை என்று அர்த்தமாகி விடாது. அவர்களுக்குத் தெரியவேண்டும் என நான் இவற்றையெல்லாம் செய்வதில்லை.

தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றுவிட்டால், கவிஞர் தமிழச்சி என்ன செய்வார்?

எல்லாவற்றுக்கும் மனது தான் காரணம். காலையில் இன்னும் முன்கூட்டியே எழுந்து எழுதவதற்கென நேரம் ஒதுக்க வேண்டும். எழுத்து தான் ஆதாரம்.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

t1

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x