Published : 02 Mar 2019 09:38 AM
Last Updated : 02 Mar 2019 09:38 AM

8 ஆண்டு ஆகியும் ‘பொறுப்பு’ இல்லையே: என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் ஏக்கம்

காங்கிரஸில் இருந்து பிரிந்து, 2011 பிப்ரவரி 7-ம் தேதி அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கினார் ரங்கசாமி. சில மாதங்களிலேயே சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்து முதல்வரானார். கட்சியின் பொதுச் செயலாளராக பாலன் உள்ளார். இதுதவிர 5 துணைத் தலைவர்கள், 5 செயலாளர்கள், ஒரு பொருளாளர், 5 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 18 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

மற்றபடி, மாவட்டம், தொகுதி அளவிலான நிர்வாகிகள், விவசாய அணி, இளைஞர் அணி, மகளிர் அணி என எந்த அணிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. தொகுதிக்கு நிரந்தர நிர்வாகிகள் இல்லாமலேயே கடந்த 2014 மக்களவைத் தேர்தலை முதல்முறையாக என்.ஆர்.காங்கிரஸ் சந்தித்து வென்றது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவிலை. இதில் வெற்றியை நழுவவிட்டாலும்கூட, என்.ஆர்.காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சி ஆனது.

2-வது மக்களவைத் தேர்தலை என்.ஆர்.காங்கிரஸ் சந்திக்க உள்ள நிலையில், கட்சித் தொண்டர்கள் கூறியதாவது:

2011-ல் கட்சி பதிவு செய்யப்பட்டபோது 279 உறுப்பினர்கள் இருந்தனர். தொடர்ந்து ஏராளமானோர் சேர்ந்து கட்சிக்காக உழைத்தோம். கடந்த மக்களவைத் தேர்தலின்போது தொகுதிதோறும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. தேர்தலின்போது தற்காலிகமாக சிலரை நியமித்தனரே தவிர, பொறுப்பாளர்களை நியமிக்கவில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே நிலைதான். அடுத்த மக்களவைத் தேர்தல் வரவுள்ளது. இனியாவது கட்சி பொறுப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருக்கிறோம்’’ என்றனர்.

இதுபற்றி முக்கிய நிர்வாகிகள் தரப்பில் கேட்டபோது, ‘‘மக்களவைத் தேர்தலுக்காக விரைவில் அலுவலகம் திறக்கப்பட உள்ளது. தேர்தல் பணிக்குழுவை நியமிக்க உள்ளோம். புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் தலா ஒரு தலைவர், 2 பிரதிநிதிகள் என மொத்தம் 90 பேர் நியமிக்கப்பட உள்ளனர். தலைவர் ரங்கசாமி இறுதி முடிவு எடுத்து அறிவிப்பார்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x