Published : 25 Mar 2019 11:18 AM
Last Updated : 25 Mar 2019 11:18 AM

நான் ஒரு கால்டாக்ஸி; வேட்பாளர்கள் அதில் பயணிக்கட்டும்: தேர்தலில் போட்டியிடாதது குறித்து கமல்ஹாசன் பதில்

தான் கால்டாக்ஸி எனவும், அதில் வேட்பாளர்கள் பயணிக்கட்டும் எனவும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை நேற்று முழுவதுமாக அறிவித்தார். பின்னர் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். இந்த மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. 

இந்நிலையில், கமல்ஹாசன் இன்று (திங்கள்கிழமை) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தலில் போட்டியிடாமல் கோவையில் பின்வாங்குவதாக எழுந்துள்ள விமர்சனம் குறித்து கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், "வேட்பாளராக நிற்பதற்கு தயக்கமில்லை, எனக்கு வேலை இருக்கிறது. இந்த பல்லக்கில் நான் பவனி வர விரும்பவில்லை. இந்த பல்லக்குக்கு தோள் கொடுக்க விரும்புகின்றேன். அதுதான் என் வேலை. இன்று இந்த முகங்கள் தெரியாமல் இருக்கலாம். நாளை இந்த முகங்களை மக்களுக்கு தெரியவைப்பது என்னுடைய கடமை. என்னை ஒரு உபேர் டாக்ஸி போன்று கருதுகிறேன். அதில் வேட்பாளர்கள் பயணிக்கட்டும்.

இதன்மூலம் இன்னும் அதிக மக்களை ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு தொகுதியில் நான் நின்றிருந்தால், தொகுதி நலன் கருதி, சுயநலன் கருதி அந்த இடத்திலேயே தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். இதனால், ஒவ்வொரு தொகுதிக்கும் நான் இருமுறையாவது செல்ல வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அந்த விமர்சனம் பின்னர் பாராட்டாக மாறும்" என கமல்ஹாசன் தெரிவித்தார்.

பின்னர் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதி சாத்தியமா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு, "சாத்தியமாவதை மட்டுமே நாங்கள் வாக்குறுதிகளாக அளித்துள்ளோம். சாத்தியமில்லாத பெருங்கனவுகளை காட்டி மக்களை மயக்க விரும்பவில்லை. எது சாத்தியமோ அதைமட்டுமே எடுத்துச் சொல்லியிருக்கிறோம். அதனை சொல்வதற்கு முன்னர், இது முடியுமா, முடியாதா என்பதை பல வல்லுநர்களுடன் ஆராய்ந்து தான் முடிவெடுத்திருக்கிறோம்" என கமல்ஹாசன் தெரிவித்தார்.   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x