Published : 23 Mar 2019 05:14 PM
Last Updated : 23 Mar 2019 05:14 PM

அன்புமணி மீது என்னென்ன வழக்குகள் உள்ளன? - வேட்புமனு தாக்கலில் தெரியவந்த விவரங்கள்

தருமபுரி பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்குகளின் விவரங்கள், அவர் வேட்பு மனு தாக்கலின்போது தெரியவந்துள்ளன.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவரும் அத்தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில், அன்புமணி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அதில், தன் மீதான வழக்குகளையும் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கின் விவரங்கள்:

மத்திய அமைச்சராக இருந்த போது, அன்புமணி ராமதாஸ் மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐ தொடர்ந்த வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனை அன்புமணி தன் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். மருத்துவக் கல்லூரி அனுமதி முறைகேடு தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு அன்புமணி மீது சிபிஐ குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

இதுதவிர பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக கூட்டம் நடத்தியதாக, மாமல்லபுரம் காவல் நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குகள் உள்ளன.

தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட இந்தூர் பகுதியில் 2010 ஆம் ஆண்டில் அனுமதியின்றி கூட்டம் கூட்டியது மற்றும் தரக்குறைவாக பேசியது எனவும் அவர் மீது வழக்குகள் உள்ளன.

இருபிரிவினர் இடையே பகையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அன்புமணி மீது தருமபுரி காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு சட்டம் ஒழுங்கை மீறி பொது இடத்தில் அனுமதியின்றிக் கூடியதாக அவர் மீது தருமபுரி காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அன்புமணி மீது அவதூறு வழக்கும் இருக்கிறது.

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி அனுமதியின்றி கூடியதாக, சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது.

சட்டம் ஒழுங்கை மீறும் வகையில் அனுமதியின்றி கூடியதாக சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் அன்புமணி மீது வழக்கு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x