Last Updated : 21 Mar, 2019 04:10 PM

 

Published : 21 Mar 2019 04:10 PM
Last Updated : 21 Mar 2019 04:10 PM

தென்காசி தொகுதியில் களமிறங்கும் விருதுநகர் மாவட்ட அரசியல் வாரிசுகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணியின் நட்சத்திர வேட்பாளரான டாக்டர் கே.கிருஷ்ணசாமியை எதிர்த்து திமுக, அமமுகவில் விருதுநகர் மாவட்ட அரசியல் வாரிசுகள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி (தனி) தொகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோயில் சட்டப்பேரவைத் தொகுதிகள் மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டு அக்கட்சியின் நிறுவனர்-தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி போட்டி யிடுகிறார்.

மும்முனைப் போட்டிநட்சத்திர வேட்பாளரான டாக்டர் கே.கிருஷ்ணசாமியின் வாக்கு வங்கி களை உடைக்கும் வகையில் திமுக வேட்பாளராக ராஜபாளையம் முன்னாள் எம்எல்ஏ தனுஷ்கோடியின் மகன் தனுஷ் எம்.குமார் முதன் முறையாக களம் இறக்கப்பட்டுள்ளார். இதே போன்று, அமமுக வேட் பாளராக ராஜபாளையம் முன்னாள் ஒன்றியத் தலைவர் எஸ்.பொன்னுத்தாய் போட்டியிடுகிறார். அதிமுகவில் அரசியல் பாரம்பரியத்தில் வந்தவர் இவர் என்பதால் தென்காசி (தனி) தொகுதியில் இம்முறை மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் ராஜபாளையம் தொகுதியில் அதிமு கவை வளர்த்தவர் தனுஷ்கோடி. இவர், 1977-ல் சட்டப்பேரவை உறுப்பினராகவும், 1996-2001 வரை ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். திமுக மாவட்டச் செயலாளராக உள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனோடு ஒரே காலகட்டத்தில் அரசியலில் வலம் வந்து, அவர் திமுகவில் இணைந் தபோது தனுஷ்கோடியும் திமுகவில் இணைந்தவர்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திர னுடன் நெருங்கிய நட்பு கொண்டவர் தனுஷ்கோடி. இதன் காரணமாகவே கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கட்சி மேலிடத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தென்காசி தொகுதியில் போட்டியிட தனுஷ் எம்.குமாருக்கு சீட் வாங்கிக் கொடுத்ததாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

தனுஷ் எம்.குமார், கடந்த 22 ஆண் டுகள் கட்சி உறுப்பினராகவும், கடந்த 8 ஆண்டுகளாக திமுகவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அரசியல் பின்னணி கொண்டவர் என்பதால், டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிரான வாக்குகளை திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் பெறுவார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பனிப்போர்இதேபோன்று, ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுகவில் முக்கியப் பிரமுகராக இருக்கும் அழகாபுரியானின் மகள்தான் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொன்னுத்தாய். இவர், 2011-16-ல் ராஜபாளையம் ஒன்றியக்குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். அழகாபுரியான் மேலப் பாட்டம் கரிசல் குளத்தில் ஊராட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். தந்தை மகளுக்கு இடையே ஏற்பட்ட பனிப்போர் மற்றும் அதிகாரம் செலுத்துவதில் குறுக்கீடு போன்ற பிரச்சினையால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கடந்த 4 மாதங்களுக்கு முன் அதிமுகவிலிருந்து பிரிந்து அமமுகவில் பொன்னுத்தாய் இணைந்தார். தற்போது அமமுகவில் விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிரணி இணைச் செய லாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தென்காசி தனித் தொகுதியில் போட்டியிட சரியான வேட்பாளரைத் தேடி வந்த அமமுக இத்தொகுதியில் பொன்னுத்தாயை களம் இறக்கியுள்ளது.

தென்காசி தொகுதியில் திமுக, புதிய தமிழகம், அமமுக வேட்பாளர்களுக்கு இடையே தான் போட்டி நிலவி வருகிறது. வேட்பாளர்களின் செல்வாக்கு, பிரச்சார உத்திகள் ஆகியவைதான் இங்கு வெற்றியை தீர்மானிக்கும் என்ற நிலை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x