Published : 16 Mar 2019 06:41 PM
Last Updated : 16 Mar 2019 06:41 PM

அதிமுக- பாமக கூட்டணியின் பின்னணியில் செயல்பட்டது யார்? ஓபிஎஸ் மகனுக்கு சீட் உண்டா?- கோகுல இந்திரா சிறப்புப் பேட்டி

அதிமுக - பாமக கூட்டணியின் பின்னணியில் செயல்பட்டது யார், ஓபிஎஸ் மகனுக்கு சீட் வழங்கப்படுமா, எதற்கான இத்தனை பெரிய கூட்டணி என்று பல்வேறு கேள்விகளுக்கு அதிமுக தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா 'இந்து தமிழ்' இணையத்துக்கு சிறப்புப் பேட்டி அளித்தார்.

மக்களவைத் தேர்தல் களைகட்டிவிட்டது. ஏற்கெனவே எம்.பி.யாக இருந்தவர் நீங்கள். இந்த முறை மத்திய சென்னையில் நீங்கள் போட்டியிடுவதாகத் தகவல் உலவுகிறதே?

கூட்டணியில்  நிறையக் கட்சிகள் வந்துவிட்டன. அவர்களுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும். யார் யாருக்கு எந்தத் தொகுதிகள் என்பதை தலைமைதான் முடிவுசெய்யும். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் போட்டியிடுவேன். இந்தத் தேர்தல் இல்லையெனில் அடுத்த தேர்தல். சட்டப்பேரவைத் தேர்தலில் கூட போட்டியிலாம். தலைமையின் முடிவுக்குக் கட்டுப்படுவேன்.

தலைமை என்றவுடன் ஜெயலலிதா ஞாபகத்துக்கு வருகிறார். அவருடன் மகளிர் அணியில் நீண்ட காலம் பணியாற்றியவர் நீங்கள். அவரின் இறப்புக்குப் பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமை எப்படி இருக்கிறது?

'அம்மா, அம்மா'தான். அது வேறு. போயஸ் தோட்டத்துக்கு பின்னி சாலையில் நுழையும்போதே கோயிலுக்குப் போவதுபோன்ற உணர்வு இருக்கும். எத்தனை முறை சென்றாலும் ஒரு பயம் கலந்த உணர்வு இருக்கும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மகிழ்ச்சி இருக்கும். 'அம்மா'வைப் பார்த்தாலே, அவரை நினைத்தாலோ, ஓர் இனம்பிரியாத உணர்வு நெஞ்சை ஆக்கிரமிக்கும். பாசம், பயம், உரிமை என எல்லாமே அப்போது இருந்தது.

இப்போது தலைமையில் உள்ள எடப்பாடி பழனிசாமி அண்ணனும் ஓபிஎஸ் அண்ணனும் 'அம்மா' இருக்கும்போதே கட்சிப் பதவிகளில் இருந்தவர்கள். மூத்த அமைச்சர்களாகப் பதவி வகித்தவர்கள். 'அம்மா' உடன் இருந்தவர்களை நாங்கள் புதிதாகப் பார்க்கவில்லை. அவர்களை அணுகுவது மிகவும் எளிதாக உள்ளது. அவர்களுடன் இணக்கமான சூழலில்தான் இருக்கிறோம்.

சசிகலா, தினகரன் தேர்ந்தெடுத்த முதல்வர் ஈபிஎஸ். அவர்கள் இருவரையும் ஒதுக்கிய நீங்கள் ஏன் ஈபிஎஸ்ஸை மட்டும் ஏற்றுக்கொண்டீர்கள்?

நீங்கள் சொல்வது தவறு. இந்த ஆட்சி தனிநபருக்குச் சொந்தமானது அல்ல. இது 'அம்மா'வால், 'அம்மா'வுக்காக ஏற்படுத்தப்பட்ட ஆட்சி.

ஆனால் சசிகலா தலைமையிலான ஆட்சிமன்றக் குழு கூடித்தானே ஈபிஎஸ்ஸைத் தேர்ந்தெடுத்தது?

அவர்கள் தேர்ந்தெடுத்தார்களே தவிர, எங்கோ தூங்கிக்கொண்டிருந்த ஒரு பொம்மையைத் தட்டி எழுப்பி, முதல்வர் பதவியேற்கச் சொல்லவில்லையே? எடப்பாடி அண்ணனும் நீண்ட காலம் கட்சிப் பணியாற்றியவர்தானே!

எடப்பாடி பழனிசாமி அடிமட்டத்தில் இருந்து வந்தவராகவே இருக்கட்டும். ஆனால் அவர் சசிகலா தேர்ந்தெடுத்த நபர்தானே?

அப்படிச் சொல்வதைவிட, சசிகலாவால் முதல்வராக வர முடியவில்லை. சிறைக்குச் செல்லும்போது குடும்ப நபர் இருக்கட்டும் என்று துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமித்துவிட்டுச் செல்கிறார். நாங்கள் கூட சிறைக்குச் சென்று சசிகலாம்மாவைப் பார்த்தோம். ஓபிஎஸ் உடன் இல்லாத சூழலில், ஈபிஎஸ் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

சசிகலாவை சிறையில் சென்று பார்த்ததாகச் சொன்னீர்கள்; அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கிறீர்களா?

சோதனை வரும்போது அவருக்கு ஆதரவு கொடுத்தோம். ஆனால் இப்போது வரை அவர் வழக்கறிஞருடன் கலந்தாலோசித்து, டிடிவி தினகரன் தன்னிச்சையாக செயல்படுவதாக அறிவிக்கவில்லை, ஏன்? பிறகு எப்படி அவர்களுக்கு ஆதரவு அளிக்கமுடியும்?

'அம்மா' அத்தனை நேசித்த கட்சி விஷயத்தில், சசிகலா எத்தனை சுயநலமாக நடந்துகொண்டார் என்று தெரிந்த பிறகு, அவரை எப்படி ஆதரிக்க முடியும்?

கடந்த மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா துணிவுடன் தனித்து நின்று போட்டியிட்டார். 37 தொகுதிகளில் வெற்றிவாகை சூடினார். அந்த அதிமுக எங்கே போனது? பாஜக, பாமக தேமுதிக, பிற கட்சிகள் என்று ஏன் இத்தனை பலமான கூட்டணி? கூட்டணி பலத்தால்தான் உங்களால் வெற்றி பெறமுடியுமா?

சில சூழல்கள் இதற்குக் காரணம். முன்பு கசப்பான சில சம்பவங்கள் காரணமாக முதன்முதலாக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட 'அம்மா' முடிவெடுத்தார். அவர் நினைத்த வெற்றி கிடைத்தது. அதே வேகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதே முடிவை துணிச்சலாக எடுத்தார்.

'அம்மா' மறைவுக்குப் பிறகு எல்லாமே மாறிவிட்டது. எங்களுடைய எதிரி திமுக தோரணையுடன் கூட்டணி அமைக்கிறது. 'அம்மா'வும் இல்லை. இந்த நேரத்தில் கட்சியில் குழப்பத்தை உண்டாக்கி, 18 எம்எல்ஏக்களைத் தன்வசப்படுத்தி, கட்சிக்குள்ளும் ஏராளமான குளறுபடிகளைச் செய்து, அதிமுக விசுவாசிகளைப் பிரித்து இப்படி ஏராளமான பிரச்சினைகள் உண்டாக்கப்பட்டுள்ளன.

18 எம்எல்ஏக்கள் பிரச்சினைக்காக, சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி என்பது சரி. இப்போது மக்களவைத் தேர்தலில் அதற்கான தேவை என்ன?

சூழல் அதுபோல உள்ளது. கட்சியின் நலன் கருதியும் வெற்றிக்காகவும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தலைமையின் முடிவுக்கு நாங்களும் கட்டுப்படுகிறோம். தொண்டர்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.

அதிமுகவைக்  குறிப்பாக ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்த விஜயகாந்த், உங்கள் கூட்டணிக்குள் வந்ததை எப்படி பார்க்கிறீர்கள்? தொண்டர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா?

கூட்டணியைப் பொறுத்தவரை திமுக, அதிமுக எதிரிகள். இவர்கள் இருவரும் தனித்தனி. ஆனால் கம்யூனிஸ்டுகள் ஒருமுறை இங்கே இருப்பார்கள்; அடுத்த தடவை அங்கே செல்வர். அதிமுகவுடனான கூட்டணி வெற்றிக்கூட்டணியாக இருக்கும் என்றெண்ணி கூட்டணி அமைக்க தேமுதிக வந்தது. இந்த சூழலில் ஸ்டாலினின் பொய்ப்பிரச்சாரத்தை வீழ்த்தவேண்டும் என்பது எங்களின் குறிக்கோளாக இருந்தது. 

ஆனால் தேமுதிக ஒரே நேரத்தில் இரண்டு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதே, யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் என்றாரே பிரேமலதா?

எங்களுடன் சுமுகமாக இருந்திருந்தால் தேமுதிகவை துரைமுருகன் அசிங்கப்படுத்தி இருக்க மாட்டார். அரசியலில் சில விஷயங்கள் ரகசியம் காக்கப்பட வேண்டும். அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கக் கூடாது என்ற தந்திர நடவடிக்கையோடு திமுக செயல்பட்டது. இன்று எங்களைத் தேடி அவர்கள் வரும்போது, தொண்டர்களும் கூட்டணியை விரும்பினர். 'அம்மா' இல்லாத சூழலில் ஸ்டாலின் - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த முடிவெடுத்தோம். இனி நிச்சயமாக 'அம்மா'வை விமர்சிக்காமல், இணக்கமான போக்குடன் தேமுதிக செயல்படும்.

திமுக, அதிமுக இரண்டையுமே பாரபட்சம் இல்லாமல் விமர்சித்த கட்சி பாமக. ஜெயலலிதா குற்றவாளி; அவருக்கு நினைவிடம் கட்டக்கூடாது என்றெல்லாம் பேசியவர் ராமதாஸ். அவர்களுடன் எப்படிக் கூட்டணி வைக்க முடிந்தது?

அவர்கள் திமுகவுக்குப் போகவில்லை. மக்கள் விரோத சக்தியான திமுகவை வீழ்த்த முடிவெடுத்து நாங்கள் செயல்படுகிறோம். இன்று அதிமுக மக்கள் விரும்புகிற நல்லாட்சியைத் தருகிறது. இந்நிலையில் கூட்டணியில் இருந்துகொண்டே நம்முடைய கோரிக்கைகளை செயல்படுத்தலாம் என்று பாமகவினர் முடிவெடுத்தனர்.

காலப்போக்கில் கசப்பான சம்பவங்கள், பின்னணிகளை மறந்து இந்தக் கூட்டணி அமைந்திருக்கிறது.

இந்தக் கூட்டணி அமைவதற்குப் பின்னால் நீங்கள்தான் இருக்கிறீர்கள். அதிமுக - பாமக கூட்டணிக்குக் காரணம் நீங்கள்தான் என்று கூறப்படுகிறதே?

சிரிக்கிறார்... தலைவர்கள்தான் இந்த முடிவை எடுத்தனர். இந்தக் கூட்டணி அமைவதற்கு உதவியாக இருந்தேன்.

ராமதாஸின் அக்கா பேரனைத்தான் என்னுடைய மகள் திருமணம் செய்திருக்கிறார். விருப்பப்பட்ட இருவருக்கும் திருமணம் செய்து வைத்தோம். குடும்ப ரீதியாக சம்பந்தம் செய்ததன் அடிப்படையில், அரசியலுக்கு அப்பாற்பட்ட உறவு ராமதாஸுடன் ஏற்பட்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டேன்.

மோடி அல்ல, இந்த லேடி அலை தான் என்று முழங்கியவர் ஜெயலலிதா. மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைக் கடுமையாக எதிர்த்தவர். ஆனால் அவர் பெயரில் இயங்குவதாகக் கூறும் அதிமுக அரசு, மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறதே? உதாரணத்துக்கு உதய் மின் திட்டம், ஜிஎஸ்டி, நீட், உணவுப் பாதுகாப்பு மசோதா...

உதய் மின் திட்டத்தில் தமிழகம்தான் கடைசியாகக் கையெழுத்திட்டது. இதனால் வருங்காலத்தில் மின் பற்றாக்குறையும் செலவினங்களும் குறையும் என்பதால் கையெழுத்திட்டோம். ஜிஎஸ்டி விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ச்சியாக குரல் கொடுத்து பல்வேறு பொருட்களின் ஜிஎஸ்டி வரியைக் குறைத்தார். நீட் விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. தமிழக அரசு, மாநில உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இப்போது மட்டுமல்ல எப்போதும் அந்த நிலையைக் கடைபிடிப்போம்.

பாஜகதான் தமிழகத்தில் அதிமுகவை நாடி வந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் மற்ற கட்சிகள் இருக்கின்றன.

திமுக என்றாலே வாரிசு அரசியல் என்று விமர்சிப்பது வழக்கமாகிவிட்டது. இப்போது மக்களவைத் தேர்தலில்கூட முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்களின் வாரிசுகள் 8 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே ஓபிஎஸ் மகனும் முதல் முறையாக எம்.பி. சீட் கேட்டிருக்கிறார். எனில், அதிமுகவில் வாரிசு அரசியல் துளிர்விட்டுள்ளதா?

அதிமுகவில் 'அம்மா',  வாரிசு அரசியலை ஆதரிக்கவில்லை. இன்று முதல்வரின் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வரவில்லை. ஏனெனில் அவர்களுக்கு அரசியல் ஈடுபாடு இல்லை.

ஆனால் ஓபிஎஸ்ஸின் மகன் நீண்ட காலமாகக் கட்சியில் இருக்கிறார். அவருக்கு 'அம்மா' இருக்கும்போதே கட்சிப் பதவி வழங்கப்பட்டது. அப்போதே பாசறைச் செயலாளராக அவர் இருந்தார். நீண்ட காலம் கட்சிப் பணியாற்றியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதன் அடிப்படையில்தான் இதைப் பார்க்கவேண்டும். வாரிசுகள் என்பதற்காகவே அவர்கள் அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தாலும் வாய்ப்புகள் மறுக்கப்படுவது சரியல்லவே.

-தொடரும்

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

அதிமுக - பாமக கூட்டணியின் பின்னணியில் செயல்பட்டது யார்? | S. Gokula Indira | Exclusive interviewஅதிமுக - பாமக கூட்டணியின் பின்னணியில் செயல்பட்டது யார்? | S. Gokula Indira | Exclusive interview 

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x