Last Updated : 25 Mar, 2019 09:57 AM

 

Published : 25 Mar 2019 09:57 AM
Last Updated : 25 Mar 2019 09:57 AM

தேனியில் வாக்குகள் சிதறுவதை தடுக்க அதிமுக புது வியூகம்- தேர்தல் செலவை 3 மடங்காக உயர்த்த திட்டம்

தேனி மக்களவைத் தொகுதியில் முக்கிய வேட்பாளர்கள் களம் இறங்கி உள்ளதால் வாக்குகள் வெகுவாய் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. வெற்றிக்காக திரைமறைவு வேலைகளை அதிமுக தொடங்கி உள்ளது. மேலும், அதிமுக தேர்தல் செலவை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ்.இளங்கோவன், அமமுகவின் தங்கதமிழ்ச்செல்வன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் ஆகியோர் தேனியில் களமிறங்கியுள்ளதால் இத்தொகுதி விஐபி தொகுதியாக மாறி விட்டது. ஒவ்வொரு வேட்பாளருக்கும் வெவ்வேறு பலமும், பின்னணியும் இருப்பதால் இத்தொகுதி வாக்குகள் அதிக அளவில் பிரியும் நிலை உருவாகி உள்ளது.

அதிமுக வேட்பாளரைப் பொறுத்தவரை துணை முதல்வர் மகன் என்ற பெயரும், வலுவான பொருளாதாரமும், அதிமுக வாக்கு களும் பலமாக உள்ளன. இதனால் எப்படியும் வெற்றிபெற்று விடலாம் என்ற நம்பிக்கை ரவீந்திரநாத் குமாரிடம் உள்ளது. இதனால் அறிமுகக் கூட்டம், வேட்பு மனுத் தாக்கல், பிரச்சாரம் ஆகியவற்றில் பிரம்மாண்டம் தெரிந்தது. இதெல்லாம் தங்கதமிழ்ச்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்படும் வரைதான்.

ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதியில்தான் தங்கதமிழ்ச் செல்வன் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தபோது தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளராக களம் இறங்கிவிட்டார். தங்கதமிழ்ச்செல்வனுக்கு இப்பகுதியில் அவர் சார்ந்த சாதி வாக்குகள், நன்கு அறிமுகமான தொகுதி, அமமுகவின் முக்கியப் பிரமுகர் உள்ளிட்ட பல சாதகமான அம்சங்கள் இருப்பதால் அதிமுகவின் வாக்குகள் வெகுவாய் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகள் பாஜகவுக்கு எதிராக உள்ளதால் இந்த வாக்குகள் கிடைப்பதில் அதிமுகவுக்குப் பெரும் பின்னடைவு உள்ளது. தங்கள் அரசியல் எதிரி பன்னீர்செல்வத்தின் வாரிசை ஆரம்பகட்டத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கம் அமமுகவுக்கு உள்ளது. இதனால் அனைத்து உள்ளடி வேலைகளையும் அமமுக மேற்கொள்ளும் என்பதால் அதிமுக தரப்பில் சற்று கலக்கம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளராக ஆரூண் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பை தகர்த்து ஈவிகேஎஸ்.இளங்கோவன் களம் இறங்கியுள்ளார். இது அதிமுகவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் பாரம்பரியமான அரசியல் பின்னணி கொண்டவர், மூத்த தலைவர், பிரபலம், பேச்சுத் திறமை ஆகியவற்றால் தொகுதிக்கு இவரது வருகை பல பேரிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாயுடு, நாயக்கர் போன்ற சாதி வாக்குகள் தேனி தொகுதியில் குறிப்பிட்ட அளவுக்கு உள்ளது. இவை அனைத்தும் காங்கிரஸ் பக்கம் செல்ல வாய்ப்புள்ளது. மேலும் திமுக சார்பு வாக்குகளையும், சிறுபான்மையினர் வாக்குகளையும் எளிதில் தக்க வைத்துக் கொள்ளும் என்பதால் வாக்குகளின் இழப்பு சதவீதம் அதிமுகவுக்கு அதிகரித்துள்ளது.

இதனால், அதிமுக தங்கள் பிரச்சாரத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது. இரண்டு எதிரணியையும் எந்தெந்த வகையில் வீழ்த்தலாம், வாக்குகளை எப்படி தங்கள் பக்கம் திருப்பலாம் என்று அதிமுக சிந்திக்கத் தொடங்கியுள்ளது.

இதன் ஒருபகுதியாக ஏற்கெனவே நிர்ணயித்திருந்த தேர்தல் செலவை மூன்று மடங்காக அதிகரிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. இதற்கு நிகராக எதிர் அணிகளும் பண விஷயத்தில் தாராளம் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எதிரணியில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுப்பது, வாக்காளர்களை நன்கு கவனித்து வாக்குகளைப் பெறுவது என்று களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வருகை எங்களது வெற்றியைப் பாதிக்காது. அமமுகவைவிட சின்னத்தில் நாங்கள் பலம்பெற்று இருக்கிறோம். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இத்தொகுதி மக்கள் மனதில் இரட்டை இலை ஊறிப் போன ஒன்று. அவர்கள் யாரும் மாற்றி ஓட்டுப் போட மாட்டார்கள். எங்கள் கவனத்தைத் திருப்பவும், தங்கள் பலவீனத்தை மறைக்கவும் இதுபோன்ற திசை திருப்பும் வேலைகளை அவர்கள் செய்து வருகின்றனர். எங்கள் வெற்றி உறுதியான ஒன்று என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x