Published : 21 Mar 2019 06:07 AM
Last Updated : 21 Mar 2019 06:07 AM

தேசிய விவகாரங்களை மாநிலக் கட்சிகள் பேசக் கூடாதா?

திமுகவும் அதிமுகவும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. சிலர் சுட்டிக்காட்டியிருப்பதுபோல பல விஷயங்களில் இரு தரப்புமே ஒரே மாதிரியான கருத்துகளை வெளியிட்டுள்ளன. ஆனால், கடந்த காலமும் நிகழ்காலமும் இருதரப்புக்கும் ஒரே மாதிரியாக இல்லை.

எடுத்துக்காட்டாக, நீட் தேர்விலிலிருந்து விலக்கு பெறுவோம் என்று இருதரப்பும் கூறுகின்றன. இந்த விஷயத்தில் பாஜகவின் அழுத்தத்துக்கு அஇஅதிமுக அரசு பணிந்தது என்பது ஊரறிந்த விஷயம். அதிமுக அரசு நீட் தொடர்பாக முன்மொழிந்த மசோதாக்களின் ஆவணங்கள் டெல்லியில் அங்கே ஆளும் செளகிதார்களின் பாதுகாப்பையும் மீறி ‘காணாமல்போய்விட்டன’ என்பதும் நமக்குத் தெரியும். நீட் மட்டுமல்ல, மாநில உரிமைகள் குறித்த எல்லா விஷயங்களிலும் பாஜகவின் உள்ளூர் கிளையாகவே மாறிவிட்டது அதிமுக. பாஜக ஒருபோதும் நீட்டைக் கைவிடப்போவதில்லை. அதிமுக எப்படி இதை ‘வலியுறுத்தப்போகிறது?’

நீட்டிலிருந்து விலக்கு பெறுவோம் என்கிறது திமுக. காங்கிரஸ் - திமுக ஆட்சிக்காலத்தில்தானே அது வந்தது என்று இதற்குப் பதிலடி தருகிறது பாஜக - அதிமுக. முதலில் வெளிவந்த நீட் முறை மாநிலங்களின் விருப்பத்துக்கு உட்பட்டது என்றும் பாஜகவின் நீட் கட்டாயமானது என்றும் திமுக - காங்கிரஸ் பதில் தருகிறது. தற்கொலையா, கொலையா என்பதுதான் வித்தியாசம். ஆனால், இவ்விஷயம் தொடர்பாக மறுபரிசீலனைச் செய்யத் தயார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியிருப்பதும் திமுகவும் அதில் உறுதிகாட்டுவதும் ஓர் ஆறுதல்.

கவனிக்க வேண்டிய மாற்றம்

இந்த அறிக்கைகளில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், பல்வேறு விவகாரங்களில் திமுக தன் கருத்துகளில் மறுபரிசீலனை செய்திருப்பதை அந்த அறிக்கை காட்டுகிறது. ஹைட்ரோகார்பன் திட்டங்களை ஏற்க மறுத்திருப்பது, காவிரி வடிநிலப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஆக்க முன்வந்திருப்பது, தமிழ்நாட்டில் ஒன்றிய வேலைவாய்ப்புகளில் 90% தமிழ்நாட்டவர்களுக்கே தரப்பட வேண்டும் என்று கூறியிருப்பது, சுங்கச்சாவடி தொடர்பான வாக்குறுதி எனப் பல வாக்குறுதிகள் போராட்டக் களங்களிலிருந்து சுவீகரித்திருக்கிறது. இது நல்லதொரு ஜனநாயகச் செயல்பாடு. அதேசமயம் கூடங்குளம், சேது சமுத்திரம், நதிநீர் இணைப்பு போன்றவை குறித்த திமுகவின் கருத்துகள் பசுமை அரசியலை அவர்கள் இன்னமும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றன.

கேள்வி நியாயமானதுதானா?

மத்திய ஆட்சி தொடர்பில் பேசும்போது - அது திமுகவோ, அதிமுகவோ - ‘மாநிலக் கட்சிகள் இப்படியெல்லாம் அள்ளிவிடுவது சரியா?’ என்றொரு கேள்வி இன்று பலராலும் எழுப்பப்பட்டதைப் பார்க்கிறோம். மத்திய அரசின் எல்லைக்குட்பட்ட அதிகாரங்கள் தொடர்பாக மாநிலக் கட்சிகளால் எப்படி வாக்குறுதி தர முடியும் என்ற அந்தக் கேள்வியே தவறான கேள்வியாகும்.  நாடாளுமன்றத்தில் அறிஞர் அண்ணா ஒரு விஷயத்தை முன்பு அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார். ‘இந்தியாவில் சட்டமியற்றும் இறையாண்மை ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் பிரித்துத் தரப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் இறையாண்மை அனைவருக்கும் பொதுவானது. அது ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தங்கிவிடுவதில்லை’ என்றார் அண்ணா.

வெளியுறவுக்கொள்கையோ நிதியோ ரயில்வேயோ ஒன்றிய அரசின் கையில் – அதாவது ஒன்றியப் பட்டியலில் இருக்கலாம். ஆனால், அத்துறைகள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முடிவு குறித்து பேசவும் சட்ட முன்மொழிவுசெய்யவும் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் சம அளவு அதிகாரமும் பொறுப்பும் இருக்கின்றன. ரயில்வே பற்றி பாஜகவோ காங்கிரஸோதான் பேச வேண்டும்; திமுகவோ, திருணமூல் காங்கிரஸோ பேசக் கூடாது என்பதில்லை.

உலகெங்கும் பெரிய மாற்றங்கள் எல்லாமே பெரும்பான்மையரின் முன்மொழிவால் அல்ல; சிறுபான்மையரின் அழுத்தத்தைப் பெரும்பான்மையர் ஏற்றுக்கொள்கிற புள்ளியில்தான் நிகழ்கின்றன. 1965 மொழிப்போராட்டத்தின்போது தமிழ்நாட்டின் மாணவர்களின் குரலைச் செவிமடுக்க வேண்டிய அவசியம் ஏன் டெல்லிக்கு வந்தது? எத்தனை திமுகவினர் அப்போது நாடாளுமன்றத்தில் இருந்தார்கள்? உண்மை என்னவென்றால், பிரிவினை வந்துவிடுமோ என்று டெல்லி அஞ்சியது. அடிபணிந்தது!

மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவின் நாடாளுமன்ற அமைப்பில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்றாலும், மாற்றங்களுக்கான சாத்தியப்பாடுகள் இல்லவே இல்லை என்று அர்த்தமில்லை. போராட்டங்கள் அவற்றில் எதிரொலிக்கும்போதெல்லாம் அரசமைப்பு திருத்தப்படுகிறது.

போக வேண்டிய பாதை என்ன?

ஆனால் இவற்றையெல்லாம் செய்வதற்கான இன்றைய நாடாளுமன்றச் சாத்தியப்பாடு என்ன? தமிழை இணை ஆட்சிமொழி ஆக்குவோம் என்கிற திமுகவின் வாக்குறுதி என்ன ஆகும்? காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்தால் காங்கிரஸ் இதற்கு இணங்குமா அல்லது பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்தால் எதிர்த்துப் போராடி இதை வென்றெடுக்க முடியுமா? ஒரு தேர்தல் அறிக்கையின் அரசியல் ஒருமை (integrity) என்பதைத் தனித்தனியாக பார்க்க இயலாது. ஆட்சிமொழி, நீட், ஏற்றுமதி, ஹைட்ரோகார்பன் – இந்த நான்கும் நான்கு பிரச்சினைகள். ஆனால் அரசமைப்புரீதியில் இவை ஒரே பிரச்சினையின் நான்கு முகங்கள். அந்தப் பிரச்சினை இந்தியாவைப் பொறுத்தவரை கூட்டாட்சி / தன்னாட்சி பிரச்சினைதான். அது திமுகவுக்கோ அதிமுகவுக்கோ தெரியாத ஒன்று அல்ல. குறிப்பாக இந்திய அரசியலுக்கு அண்ணா தந்த நன்கொடையே அதுதான் – மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கம்.

1974-ல் தமிழகச் சட்டமன்றத்தில் கருணாநிதி நிறைவேற்றிய அந்த மாநில சுயாட்சித் தீர்மானத்தை நோக்கி ஸ்டாலின் திரும்புவாரா? அவர் திரும்பினால், அதிமுகவும் திரும்பும். ஏனைய மாநிலக் கட்சிகளும் அது குறித்துப் பேசும். ‘இன்றைக்கு இல்லாவிட்டாலும் ஒருநாள் தேசிய விவகாரங்களை மாநிலக் கட்சிகள் பேசலாமா?’ என்ற அசட்டுக் கேள்விகள் முடிவுக்கு வரும்!

- ஆழி செந்தில்நாதன், ஒருங்கிணைப்பாளர், தன்னாட்சித் தமிழகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x