Last Updated : 27 Mar, 2019 08:27 AM

 

Published : 27 Mar 2019 08:27 AM
Last Updated : 27 Mar 2019 08:27 AM

கே.எல்.ராவ்: கங்கை-காவிரி கனவுத் திட்ட நாயகர்

துறை சார்ந்த நிபுணர்களைத் தேடிப்பிடித்து அமைச்சகத்தில் சேர்த்துக்கொள்வது நேருவின் பாணி. அப்படி அவரால் அடையாளம் காணப்பட்டவர்தான், கே.எல்.ராவ். மின்சக்தி ஆணையத்தின் இயக்குநராக இருந்தவர். 1962 முதல் 1977 வரை விஜயவாடா தொகுதி காங்கிரஸ் உறுப்பினர். நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரின் அமைச்சரவையில் தொடர்ந்து பதவி வகித்தவர்.

1902 ஜூலை 15-ல் கிருஷ்ணா மாவட்டத்தின் கன்கிபாடு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் கானூரி லட்சுமண் ராவ். 9 வயதில் தந்தையை இழந்தார். பள்ளிக்கூடத்தில் விளையாடும்போது அடிபட்டு ஒரு கண்ணில் பார்வையையும் இழந்தார். இருந்தும் வாழ்க்கையில் சாதித்தார்.

கிண்டியில் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் மாணவர் எனும் பெருமை இவருக்கு உண்டு. பிரிட்டனின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் 1939-ல் முனைவர் பட்டம் பெற்றார். பர்மாவிலும் பிரிட்டனிலும் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவம் உண்டு.

1961-ல் விஜயவாடாவிலிருந்து மக்கள வைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1963-ல் மத்திய பாசனம், மின்னுற்பத்தித் துறை அமைச்சரானார். அவருடைய பதவிக்காலத்தில் பல பாசன அணைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. உலகிலேயே மிகப் பெரியது என்று பாராட்டப்படும் நாகார்ஜுன் சாகர் அணை திட்டத்துக்கு மூலகர்த்தா அவர்தான். பொலாவரம் அணையின் கட்டுமானம் சரியில்லாததால் கிருஷ்ணா நதியின் உபரி நீரை அதற்குத் திருப்பக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்.

பாசன அணைகளைப் பொறியாளர்கள் மட்டும் வடிவமைத்து கட்டக் கூடாது, வானிலை நிபுணர்கள், நீரியல் நிபுணர்கள் அனைவரும் சேர்ந்து வடிவமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காடுகள் அழிவதால் மழைப் பொழிவும் வெள்ளப் பெருக்கும் அதிகரிக்கும் என்பதைத் தன்னுடைய வாழ்நாளிலேயே கண்டு எச்சரித்தவர் அவர்.

1972-ல் கங்கை - காவிரி இணைப்புத் திட்டத்தை முன்வைத்தார். அன்றைக்கிருந்த நிலையில் இதை நிறைவேற்ற ரூ.1,50,000 கோடி தேவை என்று மதிப்பிடப்பட்டது. அசாம், மேற்கு வங்கம், பிஹாரில் ஏற்பட்ட வெள்ளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவிய வறட்சி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் திட்டத்தை முன்வைத்தார். எனினும், பல்வேறு காரணங்களால் அது சாத்தியமாகவில்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x