Published : 16 Mar 2019 01:40 PM
Last Updated : 16 Mar 2019 01:40 PM
தேனி தொகுதியில் குடும்ப, கோயில் விழா குறித்த கணக்கெடுப்புகளை ஆளுங்கட்சியினர் மும்முரமாக மேற் கொண்டு வருகின்றனர். ‘கவனிப்புகள்’ இருக்கலாம் என்பதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று அக்கட்சியினர் கூறுகின்றனர். இதுவரை திமுக உள்ளிட்ட கட்சிகளில்தான் வாரிசு அரசியல் அதிகளவில் இருந்து வந்தது. தற்போது அது அதிமுகவுக்கும் பரவிவிட்டதே என கட்சிக்காக உழைத்த சீனியர்கள் சற்று அதிருப்தியில் உள்ளனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரியகுளத்தில் போட்டியிட்ட கதிர்காமு வெற்றி பெற்றதில் ஓ.பன்னீர்செல்வம் பெரும் பங்கு வகித்தார். ஆனால், கதிர்காமுவோ தற்போது டி.டி.வி.தினகரனின் கட்சியில் உள்ளார். எனவே, தேனி மக்களவைத் தொகுதி மட்டுமின்றி, ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் தனக்கு நம்பகமான வேட்பாளர்களை களமிறக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். இதன் ஒரு பகுதியாக தனது மகனை ஓபிஎஸ் முன்னிறுத்தி உள்ளார் என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.
தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்சை எதிர்த்து தீவிரமாக அரசியல் செய்து வரும் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். இதுவரை ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறி வந்தவர் சமீபத்திய பேட்டியில், நான் எம்எல்ஏவுக்கு நிற்பேனா, எம்பிக்கு நிற்பேனா என்பது குறித்து கட்சித் தலைமைதான் அறிவிக்கும் என்று தெரி வித்திருந்தார்.
இதனால், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிர ஸை மட்டுமின்றி, அமமுக வையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் ரவீந்திரநாத் உள்ளார். அதிமுகவினர் இப்போதே தங்களின் களப்பணியை தொடங்கி விட்டனர்.
அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக அமைப்பு நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் பகுதியில் நடைபெறும் கோயில் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், குடும்ப விழாக்கள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர். குடும்பங்களில் நடைபெறும் காதணி விழா, திருமணம் உள்ளிட்ட பல் வேறு நிகழ்ச்சிகளில் கட்சிக்காரர்களின் தலைகள் அதிக அளவில் தென்படத் தொடங்கியுள்ளன. அங்கு ‘கவனிப்புகள்’ பலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கட்சி சாராத பொதுமக்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க வலியச் சென்று அதிமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். கோயில் விழா உள்ளிட்ட பொது நிகழ் வுகளுக்கு தேவைப்படும் நிதி உதவி தாராளமாக செய்யப்படுவதாகத் தெரிகிறது. ஆங்காங்கே நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கும் ஏராளமான பரிசுப் பொருட் கள் அனுப்பப்படுவதாகக் கூறப் படுகிறது.
கடந்த சில தினங்களாக கம்பம், போடியில் இரட்டை இலை சின்னத்துடன் கூடிய துண்டுப் பிரசுங்களுடன் சேலை, வேட்டிகள் அதிகளவில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT